Published : 17 Dec 2015 10:09 AM
Last Updated : 17 Dec 2015 10:09 AM

ஜப்பானுடன் ஒத்துழைப்பு; எச்சரிக்கை தேவை

இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்யும் வழக்கம் ஜப்பானுக்கு நீண்ட காலமாகவே இருக்கிறது. ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே சமீபத்தில் இந்தியாவில் மூன்று நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் உறவு மேலும் மேம்பட்டிருக்கிறது. புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் மின்னல் வேக மின்சார ரயில் போக்குவரத்துக்கான தொழில்நுட்பத்தையும் நிதியுதவியையும் இந்தியாவுக்குத் தருவதற்கான உடன்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளன. மக்களுடைய பயன்பாட்டுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வரவேற்கத்தக்க முடிவுகளாகத் தெரிந்தாலும் இவற்றின் சாதக பாதகங்களைக் கருத்தில்கொள்வது அவசியம். உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும் ஜப்பானுக்கான ஏற்றுமதி, அந்நாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, அந்நாட்டிலிருந்து கிடைக்கும் நேரடி அந்நிய முதலீடு ஆகியவை ஜப்பானிய மதிப்பிலேயே 1%-க்கும் குறைவாகவே இருக்கின்றன.

மேலும், புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆகும் செலவில் நமது ரயில்வேயின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தலாம் என்பது கவனிக்கத் தக்க விஷயம். மும்பைக்கும் ஆமதாபாதுக்கும் இடையே 527 கி.மீ. புல்லட் ரயில்பாதையை உருவாக்கும் பணத்தில் சுமார் 20,000 கி.மீ. சாதாரண மின் ரயில்பாதையை நம்மால் உருவாக்க முடியும். மும்பை - ஆமதாபாத் இடையேயான திட்டத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாயைச் செலவிடுவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் அரைகுறையாக நின்றுள்ள ரயில்வே திட்டங்களுக்கு அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

1998 மே மாதம் பொக்ரானில் அணுகுண்டை வெடித்துச் சோதனை நடத்தியதற்குப் பிறகு, இந்தியாவுக்கான உதவிகளை நிறுத்திவைத்த ஜப்பான் இப்போது மீண்டும் உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவை அணு ஆயுதமுள்ள நாடாக ஜப்பான் ஏற்றிருப்பதற்கான அங்கீகாரமாகவும் இதைக் கருதலாம்.

பொருளாதாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். ஜப்பானிடம் முதலீடு இருக்கிறது, இந்தியாவிலோ இதுவரை பயன்படுத்தப்படாத பல வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய துறைகளையும் திட்டங்களையும் அடையாளம் கண்டு, காலவரம்பு நிர்ணயித்து உழைக்க வேண்டும்.

அதே வேளையில், ஆசியாவில் இப்போது மறைமுகமாக நடந்துவரும் அரசியல் அணிசேர்ப்பு முயற்சிகள் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனத்துடனான பதற்றம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஜப்பான் முயல்வதைக் கவனிக்க வேண்டும். அதேபோல், சீனத்தின் வளர்ச்சிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க முயலும் அமெரிக்கா, தனது உறுதியான ஆதரவாள ரான ஜப்பானுடன் இந்தியாவையும் அதே அணியில் சேர்த்துக்கொள்ள விழைவதில் ரகசியம் ஏதுமில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘ஜனநாயக வைர அணி’யாகத் திகழ வேண்டும் என்ற விருப்பத்தை ஷின்சோ அபே ஏற்கெனவே வெளிப்படுத்தியிருப்பது நினைவுகூரத் தக்கது.

இந்நிலையில், தன்னுடைய பொருளாதார, ராணுவ முன்னுரிமைகள் என்ன என்பதை இந்திய அரசு தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டு அறிவிக்க வேண்டும். எந்த ஒரு அணியிலும் சேர்வதற்குப் பதிலாக எல்லா நாடுகளுடனும் தனித்தனியாக வலுவான உறவைப் பராமரிக்க வேண்டும். எல்லா நாடுகளும் இணைந்து வளம்பெற்றால் ஆசியாவும் முன்னேற்றமடையும். மாறாக, ஏதோ ஒரு அரசியல், ராணுவக் கூட்டில் சேர்வதால் பிரச்சினைகள்தான் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x