Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

அரசே, தன்னிலை உணர்!

அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும்கூட சாதிய வன்மத்தோடு சக மனிதர்களைக் கொல்லத் துணியும் வெறுப்புச் சூழலையும், இத்தகு கொலைகள் தலித் சமூகத்தைத் தவிர ஏனையோரிடம் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் கடக்கும் இயல்பு நிலையையும் நம் சமூகம் கொண்டிருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. தேர்தலை ஒட்டி இந்தத் தாக்குதல் நடந்திருப்பதும், கொலையுண்ட இளைஞர்கள் மற்றும் படுகாயப்படுத்தப்பட்ட இளைஞர்கள் தேர்தலில் உத்வேகத்துடன் பங்கெடுத்துக்கொண்டது நடந்த வன்முறைக்கு ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்படுவதும் நம்முடைய சமூகம் முழு ஜனநாயகத்தையும் கற்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அரக்கோணத்துக்கு அருகேயுள்ள சோகனூரில் நடந்துள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தனிமனிதப் பகை, முன்விரோதம், மணல் கொள்ளை, தேர்தல் பிரச்சினை இப்படிப் பல கோணங்களிலும் இது அணுகப்பட்டாலும் சாதிய நச்சும் இதில் ஆழமாகப் பதிந்திருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது என்றே அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. போதிய அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டப்படும் காவல் துறையே தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்திருப்பதானது சம்பவத்தின் பின்னணியில் சாதி இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பில் பாமக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது விசிக. பாமக தன் மீதான விசிகவின் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் இது தனிப்பட்டவர்களின் பிரச்சினை என்றும் கூறியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியான நடவடிக்கை இல்லை என்று கூறி ஆளும் அதிமுகவைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. பல தரப்புகளும் காவல் துறை நடவடிக்கையின் போதாமைகளையும் கண்டித்திருக்கிறார்கள். சம்பவத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.

நடந்திருப்பவை ஈவிரக்கமற்ற கொலைகள். ஒருவரின் மனைவி சிசுவை வயிற்றில் சுமந்து நிற்கிறார்; இன்னொருவரின் மனைவி எட்டு மாதக் கைக் குழந்தையுடன் நிற்கிறார். நிலைகுலைந்து நிற்கும் அவர்களுடைய பரிதவித்த முகங்களைப் பார்க்கும் எவரும் விக்கித்துப்போவார்கள். இப்படிப்பட்ட சூழலிலும்கூட ஒரு சமூகம் தனித்தனி அக்கறைகளோடும் இவ்வளவு முரண்களோடும் பேசவும் செயலாற்றவும் முடியும் என்றால், வேறு எதுதான் நம்முடைய மனசாட்சியை உலுக்க முடியும்?

முதலில் அரசு தன்னிலை உணர வேண்டும். காவல் துறை இந்த விஷயத்தில் எள்ளளவும் நீதி பிறழக் கூடாது. இதை உத்தரவாதப்படுத்த வேண்டியது காவல் துறை உயர் அதிகாரிகளின் கடப்பாடு. தலித்துகள் மீதான வன்முறை இந்தியா முழுவதுமே அதிகரித்துவரும் போக்கானது இந்தியச் சமூகம் மீண்டும் கீழ்நோக்கித் தரம்தாழும் வெளிப்பாடுதான். தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2019-ல் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியிருக்கும் குற்றங்கள் 46,000. இது 2018-ஐவிட 7% அதிகம். 2015 – 2019 காலகட்டத்தில் மட்டும் 2,05,146 குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன; ஆனால், தண்டிக்கப்பட்டிருப்பவர்களின் வீதமோ மிகக் குறைவு. தொடரும் வன்முறைகளுக்கு துறைசார் மெத்தனமும் சேர்ந்தே உத்வேகம் தருகிறது என்பதை நீதி அமைப்புகள் நினைவில் கொள்ள வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x