Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஹெச்-1பி விசாவுக்குத் தடைநீக்கம்: ஒரு நம்பிக்கை வெளிச்சம்

தொழில்திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்குவதற்கு மார்ச் 2021 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் நீட்டிக்காதது வரவேற்புக்குரியது. ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் கடுமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் திரும்பப் பெறப்படும் என்று கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதே குறிப்பிட்டிருந்தார் பைடன். அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கும் இந்தியர்களிடம் பைடனின் தற்போதைய முடிவு மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டுதோறும் ஹெச்-1பி விசாக்களின் வாயிலாகப் பெரும் எண்ணிக்கையிலான இந்திய இளைஞர்கள் பயனடைந்துவருகின்றனர். தனியார் துறையில் பணியாற்றிவரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் 65,000 விசாக்களில், ஏறக்குறைய 70% இந்திய இளைஞர்களுக்கே கிடைத்துவருகிறது. ட்ரம்ப் 2020 ஜூன் மாதத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 2,19,000 வரையிலான விசா விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கரோனா பெருந்தொற்றின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கான நோக்கத்துடனேயே இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அதன் விளைவாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை இந்தக் கட்டுப்பாடுகள் பாதிக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்தது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து மொத்தமாக ஏறக்குறைய 29.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. 2009-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், இது 143% அதிகம்.

சிலிக்கான் பள்ளத்தாக்கின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தங்களது தொழில்திறன் மிகுந்த பணிகளுக்கான, முதன்மையான ஒரு வாய்ப்பை இழக்க நேர்கிறது என்று ஹெச்-1பி விசாவுக்கான தடையை எதிர்த்தார்கள். சில பல்கலைக்கழகங்களும்கூட கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஹெச்-1பி விசாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்நிலையில், விசா வழங்குவது குறித்து பைடன் தற்போது எடுத்திருக்கும் முடிவு ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகளின் தவறுகளைச் சரிசெய்வதற்கான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைடனின் இந்த முடிவால் அமெரிக்காவின் முக்கிய உழைப்புச் சக்தியான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு ட்ரம்ப் காலத்து கடுமையான விசா நடைமுறைகளும் முடிவுக்கு வரும்.

அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையில், உள்நாட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச வேலைவாய்ப்புகளை ஒதுக்க வேண்டிவரலாம். என்றாலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தியலுக்கு எதிராக அதிபர் தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் 7.40 கோடி வாக்குகளை பைடன் மறந்துவிட மாட்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் படிப்படியாக மீட்டெடுப்பதற்கான சீர்திருத்தங்களை பைடன் மேற்கொள்வார். அவற்றில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான பலதரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களும் ஒரு பகுதியாக இருக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x