Published : 23 Nov 2015 08:22 AM
Last Updated : 23 Nov 2015 08:22 AM

கூட்டுணர்வுடன் செயல்படுங்கள்

புயலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது நாடாளுமன்றம். விரைவில் தொடங்கவிருக்கும் கூட்டத்தொடருக்கு அரசும் எதிர்க் கட்சிகளும் அவரவர் நோக்கத்தில் தயாராகிவருகின்றனர். மக்களவையைப் பற்றி அரசுக்குக் கவலை இல்லை. மாநிலங்களவைதான் அதன் கெட்ட கனவு. 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு இல்லை. எந்தப் புதிய சட்டத்தையும் திட்டத்தையும் மக்களவையில் எளிதாக நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் அவை தடுக்கப்படும் அதே நிலையைத்தான் அரசு எதிர்கொள்ளவிருக்கிறது.

ஒரு ஆக, மூன்று மாதங்களுக்கு முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுப்பிய ஒரு கேள்வி இப்போது மீண்டும் விவாதம் ஆகும். “மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்திருத்த சட்டங்களைக் கொல்லைப்புறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை தடுத்து நிறுத்தலாமா?” என்பதுதான் அது. இதுபற்றி பொது விவாதம் தேவை என்று குறிப்பிட்டிருந்தார் அருண் ஜேட்லி. உண்மையாகவே மாநிலங்களவைக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பாக விவாதம் தேவையா? மாநிலங்களவையின் அமைப்பு, அது அமைக்கப்பட்டதன் நோக்கம், அதன் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் இப்படிப்பட்ட விவாதமே தேவையில்லை என்பது விளங்கும்.

மாநிலங்களவை என்பது எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் எனும் ஒரு நோக்கத்துடன் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. தேர்தல் அரசியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாத அறிஞர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் இடம்பெற வேண்டும் என்பதற்காகவும் சேர்த்துதான் மாநிலங்களவை ஏற்படுத்தப்பட்டது. இப்படி ஒரு அவையை ஏற்படுத்தியதன் நோக்கம் மற்றொரு அவையின் செயலைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அல்ல; பரந்துபட்ட ஒரு நாட்டில் கருத்தொற்றுமையின் அடிப்படையிலான முடிவுகளே நீண்ட காலத் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதே அதன் மைய நோக்கம்.

நிதி மசோதாக்களைப் பொறுத்தவரை மக்களவைக்கே அதிக அதிகாரங்களை வழங்கி, அதன் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கிறது அரசியல் சட்டம். மானியக் கோரிக்கைகள் மீது மாநிலங்களவைக்கு உள்ள அதிகாரமும் குறைவுதான். ஒரு பிரச்சினையில் இரு அவைகளாலும் அனுசரித்துப்போக முடியாத நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டவும் அரசியல் சட்டம் வழி செய்திருக்கிறது. ஆனால், நிதி மசோதாவுக்கும் சட்டத் திருத்த மசோதாக்களுக்கும் இது பொருந்தாது. முக்கியமான இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முற்றிவருகின்றன என்பதால், இந்த ஏற்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படி மாற்றினால், அது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவை வலுவிழக்க வைத்துவிடும். மேலும், கூட்டாட்சித் தத்துவத்துக்கே கேடாய் முடியும்.

பொதுச் சரக்கு - சேவை வரிச் சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம் போன்றவற்றைக் கொண்டுவர விரும்பும் அரசு, எல்லாக் கட்சிகளையும் அழைத்துப் பேசி, விவாதித்து அனைவரும் ஏற்கும்படியாக அச்சட்டத்தை நிறைவேற்றுவதால் நாட்டின் நலன் காக்கப்படும். கருத்தொற்றுமை காண்பது இயலாத செயல் அல்ல. ஒரு சார்புக் கண்ணோட்டத்துடன் ஆளும் கூட்டணி மட்டுமே தீர்மானிப்பதைவிட, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பரிசீலித்து எடுக்கும் முடிவு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். ஜனநாயகத்தின் அடிநாதமும் அதுதான். எனவே, மாற வேண்டியது இப்போதுள்ள சட்டங்கள் அல்ல, ஆளும் கூட்டணிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் உள்ள மனநிலைதான். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்திருப்பது நல்ல மாற்றம். எதிர்க் கட்சிகளின் குரல்களுக்கும் மதிப்பளித்து, கூட்டுணர்வுடன் கை கோத்துச் செயல்படுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x