

இந்தியாவில் ‘இரண்டாவது அலை’யின் ஒரு பகுதியாக கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அரசு மற்றும் பொதுசுகாதாரத் துறை அதிகாரிகளை வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு தொற்று எண்ணிக்கை அதிகரித்த காலகட்டத்தைக் காட்டிலும் இப்போது பல வகைகளிலும் கவலை அதிகரித்திருக்கிறது. கரோனா தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்துகொள்வதில் முன்னிலை வகிப்பவரான நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல், தற்போதைய சூழல் ‘மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலை’க்குச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 1-ல் அதிகரிக்கத் தொடங்கிய தொற்று மென்மேலும் அதிகரித்தபடியே உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், நிலைமை மோசமானதாக மாறியுள்ளது. மார்ச் 1-ல் புதிய தொற்றுப் பாதிப்புகளின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 112-லிருந்து 354 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் சற்றேறக்குறைய 6.3 கோடிப் பேருக்குத் தடுப்பூசி தவணைகள் போடப்பட்டுள்ளன. எனினும், மஹாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் பெருமளவில் தடுப்பூசியின் முதல் தவணை போடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டிருப்பதோடு, அனுமதிக்குக் காத்திருக்கும் மற்ற தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதியளிக்குமாறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெருந்தொற்றின் ஏற்ற இறக்கங்கள் குறித்த இந்தியாவின் தகவல் தொடர்புகள் எப்போதுமே பலவீனமாகத்தான் இருக்கின்றன. தடுப்பூசிக்கு இன்னும் அனுமதிக்கப்படாத வயதினரிடையே இரண்டாவது அலையின்போது இறப்பு விகிதம் மாறுபடுகிறதா, மறுதொற்று ஒரு பிரச்சினையாக உருவெடுக்கிறதா என்பவை குறித்து கூடுதலான ஆராய்ச்சிகளும் தகவல்களும் தேவைப்படுகின்றன. சமயரீதியில் பெருங்கூடுகைகள், தேர்தல்கள் நடக்கும் மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு அரசு அனுமதியளித்திருப்பதும் இரண்டாவது அலைக்கான இயல்பான காரணம் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. தடுப்பூசி மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் உண்மையான பாதுகாப்புத் திறனை மக்களுக்கு உணர்த்துவதே இந்தச் சூழலில் மிகவும் அவசியமானது.