

நேபாளம் அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அடுத்தடுத்து இருபெரும் நிலநடுக்கங்களைச் சந்தித்தது. முதல் நிகழ்வில் 9,000-க் கும் மேற்பட்டவர்களும் அடுத்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள், வீடிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதமும் அதிகம்.
இந்நிலையில் புதிய அரசியல் சட்டத்தை அரசு ஏற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாதேசிகளும் சிறுபான்மைக் குழுக்களும் இந்திய எல்லையையொட்டிய சமவெளிப் பகுதிகளில் நடத்திவரும் கிளர்ச்சி காரணமாக நேபாளத்துக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மருந்து - மாத்திரைகள், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுசெல்ல முடியாமல் தடைப்பட்டிருக்கிறது. இது ஏன் என்று இதில் தொடர்புள்ள அனைவரையும் கேட்க முடியும்.
நேபாளப் பிரதமர் கே.பி. ஒலி இதை இந்தியா விதித்துள்ள பொருளாதாரத் தடை என்று குற்றஞ்சாட்டுகிறார். நேபாள அரசின் பரிவற்ற இறுக்கமான அணுகுமுறையே இதற்குக் காரணம் என்று புதிய அரசியல் சட்டத்துக்கு எதிராக நேபாளத்தின் சமவெளிப் பகுதியில் போராட்டம் நடத்திவரும் மாதேசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசுக்கும் மாதேசிகள் உள்ளிட்ட கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தாலும் இருதரப்பும் தங்களுடைய நிலையிலிருந்து இறங்கிவரத் தயாராக இல்லாததால் முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. தனது நாட்டின் தென் பகுதியில் கிளர்ச்சி செய்கிறவர்களை எதிர்கொள்ள முடியாத அரசின் செயலற்ற தன்மையால்தான் தடை நீடிக்கிறது என்றும் இந்திய அரசு சரக்குப் போக்குவரத்தைத் தடுக்கவில்லை என்றும் புதுடெல்லியில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எல்லாத் தரப்பினரும் சொல்வதில் உண்மை இருக்கிறது என்றாலும், முழு உண்மைகளை யாரும் பேசிவிடவில்லை.
நேபாளத்தின் மலைப் பகுதி மக்களிடையே கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய எதிர்ப்பு மனநிலை மெல்ல உருவாகிவந்தது. இந்நிலையில், இந்திய சரக்கு லாரிகளால் நேபாளத்துக்குள் செல்ல முடியவில்லை என்ற நிலை அவர்களுடைய எதிர்ப்பை மேலும் வலுவாக்கிவருகிறது.
நேபாளத்துக்கென்று புதிய அரசியல் சட்டத்தை இயற்றும் பணி ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்தபோதிலும் மாதேசிகள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களையும் உறுதிசெய்யும் கூட்டாட்சித் தத்துவத்தை நேபாளத்தின் புதிய அரசியல் சட்டம் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. மாதேசிகளுடைய மனக்குறை நேபாள மலைப் பகுதி அரசியல் தலைவர்கள் மீது மட்டுமல்ல, தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீதும்தான். இதனாலேயே அரசியல் கிளர்ச்சியில் தீவிரம் காட்டுகின்றனர்.
நேபாளப் பிரதமர் ஒலி, கடந்த வாரம் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தியபோது, “நேபாளத்தின் இப்போதைய நெருக்கடிக்குக் காரணமே இந்தியாதான்” என்று பழி சுமத்தினார். மாதேசிகளுடன் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்க மனமில்லாமல் பழியை இந்திய அரசின் மீது போட்டுவிட்டுத் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போக்குதான் அப்பேச்சில் தென்படுகிறது. இந்த உத்தியால் அரசியல்ரீதியிலான பலன் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.
எனினும், தன்னுடைய கருத்துகளை வலியுறுத்த இந்திய அரசுக்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. நேபாளத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலையை நாம் நீடிக்க விடக் கூடாது. பொருளாதாரரீதியாக நேபாளத்தின் கையை முறுக்கக் கூடாது. காத்மாண்டிலும் புதுடெல்லியிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலை மறந்து இரு நாடுகளின் நட்புறவையும் அப்பாவி மக்களின் நிலையையும் கருத்தில்கொண்டு தீர்வு காண வேண்டும்.