வங்கிக் கடன் பெற்றவர்களின் கரோனா காலத் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
கரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தாமல் இருக்க அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் சேர்த்து வட்டித்தொகை வசூலிப்பதைக் கைவிடுதல், கடன்பெற்ற அனைவருக்கும் எவ்வித வித்தியாசமும் இன்றி வசூலிக்கப்பட்ட கூட்டுவட்டிகளை விலக்கிக்கொள்ளுதல், கடன் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை மேலும் நீட்டித்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்த பிறகு, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வங்கிக் கடன் பெற்றவர்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடன் தவணைகள் செலுத்தாமல் இருக்க அனுமதிக்கப்பட்ட காலத்தில் வசூலிக்கப்பட்ட அனைத்துக் கூட்டுவட்டித் தொகையையும் திருப்பிச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது.
கடன் தவணை செலுத்தாமலிருக்க அனுமதிக்கப்பட்ட காலத்தில், கடன் பெற்றவர் அதைத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது எந்த அடிப்படையிலும் தவணையை வேண்டுமென்றே தவிர்ப்பது ஆகாது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடாது என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே தவணைகளைத் தவிர்ப்பவர்களுக்குத் தண்டமாகவே கூட்டுவட்டி வசூலிக்கப்பட்டுவரும் நிலையில், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடன் தவணையைச் செலுத்த இயலாத அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான முறையில் கூட்டுவட்டி விதிக்கப்பட்டிருப்பதன் அபத்தத்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடுத்துக்காட்டியிருக்கிறது. உத்தரவின் இந்தப் பகுதியால், கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரூ.7,500 கோடி அளவில் சுமை ஏற்படக்கூடும், அல்லது இந்தத் தொகையை ஒன்றிய அரசு தானாகவே முன்வந்தும் வழங்கலாம் என்றாலும் கடனளவு மாறுபாட்டின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக இது மிகப் பெரிய உதவியாக அமையும்.
அதே நேரத்தில், பெருந்தொற்றுக் காலத்தின் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த அரசின் பதிலானது, உயிர் பாதிப்புகளையும் பேரிடர்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லையா என்றொரு கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்க அனுமதிக்கும் காலத்தை நீட்டிக்கும் அல்லது சாதாரண வட்டியைத் தள்ளுபடிசெய்வது உள்ளிட்ட எந்தவொரு தள்ளுபடி நடவடிக்கையும் நிதியமைப்பின் நிலைத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கச்செய்யும் என்று ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக வாதிடுகிற அதே வேளையில், பெருந்தொற்று என்பது பொது சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் சற்றும் எதிர்பார்க்கவியலாத பேரிடர் என்பதையும் நிரூபித்துள்ளது.
அரசின் நிதிப் பொறுப்புகளையும் இது அதிகப்படுத்தியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான அமைப்புசார்ந்த மற்றும் சாராத சிறு, குறு தொழில் துறையினர் மட்டுமின்றி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் கடன் சுமையால் திணறுகின்றனர். எனவே, வாராக் கடன்களால் வங்கிகள் பாதிக்கப்படுவதற்கு முன்பே இந்தப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை உடனடியாக மீட்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் நிதிக் கொள்கையை வகுப்பவர்களுக்குமே இருக்கிறது.
