

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களது தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகளில் பலவும் கல்விக்கு முக்கிய இடம் அளித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். கல்விக்கு அரசு செய்யும் முதலீடு என்பது அனைத்துத் துறைகளுக்கும் உந்துதல் செலுத்தக்கூடியதாகும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும், கூடவே பொருளாதார முன்னேற்றம் காண்பதற்கும் கல்விதான் அடிப்படை. இந்த உணர்வு அரசியல் கட்சிகளுக்கு இருப்பது மிகவும் முக்கியம்.
திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்விக் கடனை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வை ரத்துசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், மாநில அரசு நடத்திவரும் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவரப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துவருபவர்களுக்கு 10 ஜிபி தரவு வசதியுடன் கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகள், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றுக்கான அரசுப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. அரசமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று கூறியிருப்பதும் வரவேற்புக்குரியது.
அதிமுக ஆண்டு முழுவதும் 2 ஜிபி தரவு வசதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு போன்றவற்றுடன் இணைந்து சர்வதேசத் தரத்தில் 10 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு நிறைவேறுமானால், தமிழகத்தின் கல்வித் தரம் மேலும் மேம்பட்ட நிலையை அடையும். தமிழ் கட்டாயப் பாடம், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர முயற்சி என்ற அறிவிப்புகள் திமுக அறிக்கையில் உள்ளதுபோல் இருந்தாலும் நல்ல விஷயமே. உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கும் சத்துணவு, அரசுப் பள்ளியில் படிக்கும் சுயநிதி மாணவர்களுக்கும் மடிக்கணினி போன்ற அறிவிப்புகள் மாணவர்களுக்கு நன்மை தருபவை.
பிரதானக் கட்சிகளைப் போலவே அமமுகவும் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவதற்கு முயற்சி மேற்கொள்ளும் என்று கூறியிருக்கிறது. மேல்நிலைப் பள்ளி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மொத்த மாநில உற்பத்தியில் 6% கல்வித் துறைக்கு ஒதுக்கப்போவதாகக் கூறியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் கல்விக் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது. புதிய அறிவிப்புகளுக்குக் கவனம் அளிப்பவர்கள் சமகாலக் குறைபாடுகளுக்கும் போதாமைகளுக்கும் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித் துறை சுயாதீனமாகச் செயல்படுவதற்கான சூழலையும் உத்வேகத்தையும் அளிப்பது கல்வித் துறையில் தமிழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்க முக்கியமானது ஆகும்.