Published : 04 Nov 2015 09:03 AM
Last Updated : 04 Nov 2015 09:03 AM

நல்லெண்ணங்கள் கூட்டுநலன்களில் எதிரொலிக்கட்டும்!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 51 நாடுகளில் 41 நாடுகளின் தலைவர்கள் புது டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். 1983-ல் நடந்த அணிசாரா நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட மிகப் பெரிய நிகழ்வு இது. இந்த மாநாட்டின் நோக்கம் என்ன என்பது அனைத்து நாடுகளாலும் நன்கு உணரப்பட்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மூன்று தசாப்தங்களுக்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த நெருக்கமான உறவை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ளவே இந்த மாநாடு கூட்டப்பட்டது. அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடக்கிவைத்த பயணத்தில் இது அடுத்த மைல் கல்.

1990-களில் இந்தியா தன்னுடைய வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டபோது ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதில் சற்றே வேகம் குறைந்தது. அந்தச் சுணக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் மீண்டும் அதை விரைவுப் பாதையில் கொண்டுசெல்லவும்தான் இந்தியா - ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இந்த அடிப்படையில் 2008-ல் புது டெல்லியிலும் 2011-ல் அடிஸ் அபாபாவிலும் நடந்த உச்சி மாநாடுகள் குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் நடந்து முடிந்த புது டெல்லி மாநாடு உறவை வலுப்படுத்துவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டங்களோடு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய அரசு 1,000 கோடி டாலர் கடன் உதவியை அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் உறுப்பினர் எண்ணிக்கையை வலுப்படுத்தி அதில் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தருவது குறித்து ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவின் முக்கியமான வணிகக் கூட்டாளிகள். இந்திய எரிசக்தி நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நுகர்வோர் பண்டங்கள், இயந்திரங்கள், மருந்து - மாத்திரைகள் ஆகியவை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2014-15-ல் இந்திய - ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் அளவு 7,000 டாலர்களாக இருந்தது. இந்திய நிறுவனங்கள் 3,000 கோடி டாலர்கள் முதல் 3,500 கோடி டாலர்கள் வரையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதலீடு செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தகம் அதிகரித்திருந்தாலும் சீனத்துடனான வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான்.

2014-15-ல் ஆப்பிரிக்க நாடுகள் சீனத்துடன் 20,000 கோடி டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் செய்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் சீனத்தின் முதலீடு 18,000 கோடி டாலர்கள். மின்சார உற்பத்தி முதல் அடித்தளக் கட்டுமானம் வரையில் பல்வேறு இனங்களில் சீன முதலீடுகள் பரந்துள்ளன. சீனத்தின் இயற்கை வளமும் மனித ஆற்றலும் அதிகம் என்பதால், இந்தியா அதனுடன் போட்டி போடுவது கடினம். ஆனால் தெளிவான கொள்கைகள், திட்டங்களை விரைந்து முடிக்கும் செயலாற்றல், மேம்பட்ட இருதரப்பு உறவுகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை இந்தியா மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தன்னைப் போலவே காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் இடையறாது குரல் கொடுத்துவந்தது. எனவே, இந்தியா மீது ஆப்பிரிக்க நாடுகளுக்கு எப்போதுமே நல்லெண்ணம் உண்டு. அந்த நல்லெண்ணத்தை அனைத்துத் துறைசார் கூட்டுநலன்களிலும் எதிரொலிக்க வைப்பதிலேயே உண்மையான வெற்றி இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x