Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

நிதி நிறுவனங்களின் கடன் வழங்கலில் சார்பு நிலைகள் கூடாது

நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சில தொழில் துறையினருக்கு மட்டுமே கடன்களை வழங்குவது வாராக் கடன் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தொழில் துறை மாநாடு ஒன்றில் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் சுட்டிக்காட்டியிருப்பது ஒட்டுமொத்த நாடும் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டுவருவதற்கான பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவசியமான வழிகாட்டலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கடன் வழங்கும் வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று நிதி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், சொத்துகளை உருவாக்கும் உயர்தரக் கடன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கரோனா பெருந்தொற்றின் காரணமாக நலிவடைந்துள்ள சகல தொழில் துறைகளும் வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் எனில், அது பாரபட்சமற்ற கடன் வாய்ப்புகளில்தான் இருக்கிறது.

பெரும் கடன்களைப் பொறுத்தவரையில் 1990 தொடங்கி இந்திய வங்கிகள் வாராக் கடன் பிரச்சினைகளைச் சந்தித்துவருவதற்கு முக்கியக் காரணம், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வாய்ப்புள்ளவர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்காமல் நெருக்கமாக இருக்கும் சில தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கடன் வழங்கியதே ஆகும். கடனைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உண்டா என்று உறுதியாகத் தெரியாத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குக் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என்றால், நிச்சயம் அங்கு மூலதன உருவாக்கத்துக்கு வாய்ப்பில்லை. பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அளவுக்கதிகமாகக் கடன்களை வழங்குவது கூடாது என்பதும் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடன் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பதும் சுப்ரமணியத்தின் ஆலோசனைகளில் முக்கியமானவை.

வங்கிகளின், நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் முறையைப் பெருந்தொற்றுக் காலத்தின் பொருளாதார விளைவுகளைச் சரிப்படுத்தும் விதத்தில் திட்டமிடுவதே எல்லா வகையிலும் சரியாக இருக்க முடியும். குறிப்பாக, சிறு குறு தொழில் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான மூலதனச் செலவுகளுக்கு உதவும் வகையில், புதிய கடன் கொள்கை அவசியம். பெரும் கடன் வாய்ப்புகளின் வாயிலாக மூலதனங்களை ஒரே இடத்தில் குவிப்பதைக் காட்டிலும் அவற்றைப் பகிர்ந்தளித்து பல்வகைப்பட்ட தொழில் நிறுவனங்களும் பயன்கொள்ளச் செய்வதே இப்போதைய உடனடித் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x