இல்லத்தரசிகளுக்கு மாத ஊதிய அறிவிப்புகள்: எளியோர்க்கும் பலன் தரட்டும்

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதிய அறிவிப்புகள்: எளியோர்க்கும் பலன் தரட்டும்
Updated on
1 min read

தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு அரசே ஊதியம் வழங்கும் என்று அறிவித்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியும் தமது ஏழு அம்சத் திட்டங்களில் ஒன்றாக இந்த வாக்குறுதியை அளித்திருந்தது. வீட்டு நிர்வாகத்தில் பெண்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக நடந்துவரும் பெண்ணிய விவாதங்களின் விளைவாக இந்த வாக்குறுதியைப் பார்க்கலாம்.

குழந்தை வளர்ப்பு, சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், குடும்பத்திலுள்ள முதியவர்களைப் பராமரித்தல் என்று பெண்கள் செய்யும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக ஊதியத்தைக் கணக்கிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், பெரும்பாலான ஆண்களின் அலுவலக ஊதியத்தைக் காட்டிலும் அதிகமானதாகிவிடக்கூடும். அன்பின் அடிப்படையிலும் குடும்பப் பொறுப்பின் அடிப்படையிலும் இத்தகைய உழைப்பானது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் பெண்களால் வழங்கப்பட்டுவருகிறது. இந்தியாவின் குடும்ப அமைப்பும் திருமண உறவுமுறைகளும் இந்தப் பணிகளைப் பெண்களின் மீது மட்டும் வலுக்கட்டாயமாகச் சுமத்துவதாக இனியும் தொடரக் கூடாது என்ற பார்வையையும் சமூகம் வரித்துக்கொள்ள வேண்டும்.

60%-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுப் பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கான காரணம், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அந்தப் பணிகளைச் செய்வதற்கு முன்வருவதில்லை என்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் இல்லத்தரசிகளின் உழைப்பைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு உரிமை ஊதியம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், ஊதியத்துக்காக வீடுகளைச் சுத்தம்செய்தல், சமையல்செய்தல் போன்ற பணிகளைச் செய்துவரும் விளிம்புநிலைச் சமூகத்தின் பெண்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு இன்னும் நடைமுறையில் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களும் வீடுகளில் பணிபுரியும் விளிம்புநிலை மகளிர் மீது இன்னும் கருணை காட்டவில்லை. கரோனா காலகட்டத்தில் வேலையிழப்புக்கு ஆளாகிக் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானவர்களில் வீட்டுப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களும் அடக்கம். பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், பெண்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்துவதற்கு முதற்படியாக அமையட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in