நீதிமன்ற உத்தரவுகள் தாமதமின்றிச் செயல்வடிவம் பெறட்டும்

நீதிமன்ற உத்தரவுகள் தாமதமின்றிச் செயல்வடிவம் பெறட்டும்
Updated on
1 min read

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தலைமைச் செயலாளருக்கும் காவல் துறை இயக்குநருக்கும் பிறப்பித்திருக்கும் உத்தரவு, நிர்வாகத் துறையில் நிலவிவரும் நீண்ட கால சுணக்கப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சென்னை மாநகரக் காவல் ஆணையரிடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் மறுபணி வழங்கல் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள், மேல் முறையீடுகள் மீது முடிவெடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழகத் தலைமைச் செயலாளருக்கும் காவல் துறை இயக்குநருக்கும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள்தொகைப் பெருக்கம், சட்டரீதியான தீர்வழிகள் குறித்த விழிப்புணர்வு மட்டுமின்றி, வழக்காடிகளின் திட்டமிட்ட இழுத்தடிப்புகள் ஆகியவற்றால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நீதிமன்றங்களே முயன்றாலும் வழக்குகளை எளிதில் தீர்த்துவைக்க இயலாத நிலை காணப்படுகிறது. நீதிமன்றங்களின் விசாரணை நிலையிலேயே வழக்காடும் தரப்பினர்கள் மனம் சோர்ந்துவிடுகிற நிலையில், தீர்ப்புகள் கிடைத்த பிறகும் அதைச் செயல்படுத்த முடியாத நிலை தொடர்வது இன்னும் கொடுமையானது.

உரிமையியல் மற்றும் குற்றவியல் தன்மை உள்ள வழக்குகளின் தீர்ப்புகள் மட்டுமின்றி, பொதுநல நோக்கில் நீதிப் பேராணை கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளில் அளிக்கப்பட்ட உத்தரவுகளும்கூட உடனடியாக நடைமுறைக்கு வருவதில்லை. நிர்வாகத் துறையிலும் காவல் பணித் துறையிலும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவுகள் இடப்படுகின்றன என்றாலும் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக அவர்கள் அதை உடனடியாகச் செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறார்கள் என்று பொருள்கொண்டுவிட முடியாது. மாவட்ட அளவிலான அதிகாரிகளின் கூடுதல் பணிச்சுமைகளும்கூட இந்தக் காலதாமதத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகும் அது நிர்வாகத் துறையினரால் காலதாமதத்துக்கு ஆளாவதால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுகளும் சட்டங்களுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுபவை. ஆகவே, சட்டங்களோடு சட்டங்களின்படி அமைந்த தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நிர்வாகத் துறைக்கு உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in