கருப்புச் சட்டங்களுக்கு முடிவு எப்போது?

கருப்புச் சட்டங்களுக்கு முடிவு எப்போது?
Updated on
2 min read

நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதுமே வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று, தேவையற்ற சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவது. ஆனால், அரசு அப்படித் தேர்ந்தெடுத்த / தேர்ந்தெடுக்கும் சட்டங்கள் பல மேலே இருப்பவர்களுக்குத் தேவையற்றதாக இருக்கின்றனவே தவிர, கீழே இருப்பவர்களுக்குத் தேவையற்றதாக இல்லை. ஆனால், இந்திய ஜனநாயகத்தைத் தலைகுனிய வைக்கும் காலனியாதிக்கக் கருப்புச் சட்டங்கள் பல எல்லா ஆட்சிகளிலும் வழக்கம்போலக் கோலோச்சித்தான் வருகின்றன. தேச விரோதச் சட்டம் அவற்றில் முக்கியமான ஒன்று.

தமிழக அரசு, சமீபத்தில் பாடகர் கோவனுக்கு எதிராக தேச விரோதச் சட்டத்தைப் பயன்படுத்திய விவகாரம், அமெரிக்க ஊடகங்களில் தொடங்கி பாகிஸ்தான் ஊடகங்கள் வரை ஒரு செய்தியாகியிருக்கிறது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில், இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்னொரு மாநிலம், குஜராத். ஹர்திக் படேலுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோவன் மதுவுக்கு எதிரான பிரச்சாரப் பாடல்களைப் பாடும் தெருப் பாடகர். ஹர்திக் படேலோ, குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் அல்லது இடஒதுக்கீடு முறையையே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் குஜராத் அரசு நிர்வாகத்தையே சில நாட்களுக்கு முடக்கிவைத்தவர். ஒரு சட்டத்தை எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு இருமுனை உதாரணங்களாக இவற்றைப் பார்க்கலாம் என்றாலும், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சட்டங்களுக்கான தேவையே இன்றைக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், தேசப் பாதுகாப்பு கருதி தேசத் துரோகம், தேசத்தின் மீதான சதி போன்றவற்றில் ஈடுபடுவோரையும்கூடக் கையாள நம்முடைய சட்டத்தில் ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவாகிய ‘124ஏ’, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நாள் முதல் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுவதையே வரலாறாகக் கொண்ட சட்டம். தேசப் பிதா காந்தி, பகத் சிங், திலகர் என எத்தனையோ தேச பக்தர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது நேரு காலத்திலிருந்து தொடரும் விவாதம். அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதையே தன் நிலைப்பாடாகக்கொண்டிருந்தார். எனினும், சட்ட நிபுணர்கள் மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். 1950-கள், 1960-களில் உச்ச நீதிமன்றத்தில் இச்சட்டப் பிரிவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. 1962-ல் கேதார்நாத் சஹானி வழக்கில் இச்சட்டத்தின் வரம்புகள் குறுக்கப்பட்டன. இச்சட்டம் அரசியல் சட்டப்படி சரியானது என்றாலும், உண்மையிலேயே பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இச்சட்டப்படி வழக்குகள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அரசுகள் அதைக் கேட்பதே இல்லை. சமகாலத்தில் இச்சட்டத்தை எவ்வளவு மோசமாகக் கையாளலாம் என்பதற்கான உதாரணங்களில் ஒன்று, மருத்துவர் வினாயக் சென் வழக்கு.

தமிழகத்திலும் எல்லாக் காலகட்டங்களிலும் ஆட்சியாளர்கள் தமக் கேற்றார்போல் இச்சட்டத்தை வளைத்துக்கொள்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதுமான இச்சட்டப் பிரிவின் பிரயோகம் என்றைக்கும் மறக்கக் கூடியது அல்ல. ஒருகாலத்தில் இச்சட்டத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் அரசே இன்றைக்கு அந்நாட்டில் இச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அமெரிக்கா தொடங்கி நியூசிலாந்து வரை எத்தனையோ நாடுகள் இப்படிப்பட்ட சட்டப் பிரிவுகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டன. நாம் எப்போது முடிவுக்குக் கொண்டுவருவோம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in