

தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுவரை நிகழ்த்தியுள்ள தாக்குதல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு எல்லா வல்லரசுகளும் இணைந்தும் விரைவாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், துருக்கியின் அன்டால்யா நகரில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் இப்பிரச்சினை உடனடியாக அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் தங்களுடைய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு ஐஎஸ் அமைப்புக்கு எதிராகக் கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்திருப்பதும் வரவேற்கத் தக்கவை. கடந்த வாரம் வரையில் இவ்விரு நாடுகளும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தாலும் இரு வேறு திசைகளில் செயல்பட்டன. சிரிய ராணுவப் படைகளுக்கு ரஷியாவும், சிரிய அரசையும் ஐஎஸ் அமைப்பையும் ஒரு சேர எதிர்த்த கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்துவந்தன.
ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் அமெரிக்காவும் ரஷியாவும் ஒரே அணியில் இடம் பெறுவதுடன், அந்த அமைப்புக்கு நிதி உதவியோ ஆயுத உதவிகளோ கிடைக்காமல் தடுப்பதையும் ஜி-20 அமைப்பில் உள்ள எல்லா நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். சிரியா தொடர்பான கொள்கையில் பல்வேறு நாடுகளுக்கு முரணான கண்ணோட்டம் இருந்துவந்ததால் ஐஎஸ் அமைப்புதான் பலனடைந்து வந்தது. சிரியாவில் அதிபர் அசாதுக்கு எதிராகப் போரிடும் கலகக்காரர்களுக்குத் தேவைப்பட்ட ஆயுத உதவி, நிதியுதவி, ஆள் பலம் போன்றவற்றை சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற நாடுகள் அளித்து உதவி வருகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஐஎஸ் அமைப்புக்கே சென்று சேர்கின்றன. இதனாலேயே அது வலுவடைந்து வருகிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாதைப் பதவியிலிருந்து அகற்ற இது உதவும் என்று பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை கண்டும் காணாமலும் இருந்தன. அசாதைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விலக்கிவிட்டு ஐஎஸ் அமைப்பை ஒடுக்க வேண்டும் என்பதில் மட்டும் ஜி-20 நாடுகள் கவனம் செலுத்தினால் ஒழிய வெற்றி பெற முடியாது.
சிரியா விவகாரத்தில் இதுவரை மவுனம் சாதித்த இந்தியா முதல் முறையாகக் கருத்து தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை எல்லா நாடுகளும் சேர்ந்து ஒடுக்க 10 அம்சத் திட்டம் ஒன்றைப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் முன்வைத்திருக்கிறார். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும், இணையவழித் தொடர்புகளையும் தகவல்களையும் கண்காணிக்க வேண்டும், பணப் பரிமாற்றங்களை விசாரிக்க வேண்டும், உளவு அமைப்புகள் தங்கள் நாட்டுக்குத் தரும் தகவல்களைப் பிற நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும், பயங்கரவாதிகளைப் பிடிக்கவும் ஒடுக்கவும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. நல்ல தொடக்கம் இது. ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இத்துடன் கலைந்துவிடாமல், பொதுவான திட்டத்தைத் தீட்டி அதை முனைப்புடன் அமல்படுத்தி பயங்கரவாதிகளை ஒடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.