

சில வழக்குகளின் தீர்ப்புகள் குறிப்பிட்ட அந்த வழக்கைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துவிடுகின்றன. முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர் தொடுத்திருந்த அவதூறு வழக்கில், பத்திரிகையாளர் பிரியா ரமணியை நீதிமன்றம் விடுவித்திருப்பது அந்த வகையில் ஒரு முக்கியமான வழக்காகும். நாட்டின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்களது பணியிடங்களில் பாலியல் தொல்லைக்குள்ளான அனுபவங்களைப் பொதுவில் பகிர்ந்துகொண்ட ‘மீ டூ' இயக்கத்துக்கு இது ஒரு முக்கியமான வெற்றி. ஒருவேளை, இந்த வழக்கில் பிரியா ரமணிக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், அது மேலும் பல பெண்களுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்த வழக்குடன் தொடர்புடைய ஊடகத் துறையில் மட்டுமின்றி, மற்ற பணிச் சூழல்களிலும்கூட இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாகும் பெரும்பாலான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. இப்போது, காலம் கடந்த பின்பும்கூட அதைச் சொல்வதற்கான ஒரு புதிய வெளி அவர்களுக்கு உருவாகியிருக்கிறது.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எம்.ஜே.அக்பர், தனது மதிப்பும் நற்பெயரும் குலைக்கப்பட்டுள்ளன என்பதே அவர் தொடுத்த வழக்கின் சாராம்சம். எனினும், பிரியா ரமணி அளித்த பதிலையும் அவருக்கு ஆதரவாக மற்றொரு பத்திரிகையாளர் கஸலா வஹாப் கூறியதையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், அவை நற்பெயரைக் கேள்விக்குட்படுத்துவதற்குப் போதுமானவை என்று திருப்தி தெரிவித்துள்ளது. பொதுநலனை முன்னிட்டே பிரியா ரமணியின் அனுபவங்கள் பொதுவெளியில் சொல்லப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது இந்தத் தீர்ப்பின் வரவேற்புக்குரிய விஷயம்.
கூடுதல் மாநகர நீதித் துறை நடுவர் ரவீந்திர குமார் பாண்டே, ‘பெண்களின் வாழ்வாதாரத்துக்கான உரிமையையும் அவர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதற்கான உரிமையையும் விலையாகக் கொடுத்து, ஒருவரின் நற்பெயருக்கான உரிமையைப் பாதுகாக்க முடியாது’ என்று கூறி, பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராகப் பெண்கள் குரல்கொடுக்கும்போது, அவர்களைக் குற்றவியல் அவதூறுக்காகத் தண்டிக்க முடியாது என்று சரியான விளக்கத்தை அளித்துள்ளார். பெரும்பாலான பணிச் சூழல்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நபருக்கும் அவரால் பாதிக்கப்படுபவருக்கும் இடையில் அதிகாரச் சமநிலையின்மை நிலவுவதை அவர் கணக்கில் கொண்டுள்ளார். அதன் காரணமாக, நன்மதிப்பு குறையக்கூடும் என்றாலும், ‘ஒரு பெண் பல ஆண்டுகளுக்குப் பின்பும்கூட தான் பாதிப்புக்கு ஆளானதாக அவர் விரும்பும் எந்தவொரு வெளியிலும் புகார் தெரிவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறார்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது பெண்களின் சுதந்திரம், சமத்துவம், சம வாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேவையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இந்த அடிப்படையான உரிமைகள் பணிச் சூழல்களில் மறுக்கப்பட்டால், உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பு விரும்பத்தக்க அளவில் இல்லாமல் குறைந்துவிடும். இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும்போது, மலிவானதும் விரைவானதுமான குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் ஒருவரின் விமர்சனத்தை அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்ற ஆயுதமாகவே கையாளப்படும். இப்போதாவது, குற்றவியல் அவதூறுகளுக்கு முடிவுகட்டி, அவதூறுகளால் தனது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதும் நபர், அதற்கு உரிமையியல் தீர்வுகளை மட்டுமே பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவது பற்றி யோசிக்க வேண்டும்.