Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கிரிப்டோ நாணயங்களுக்கு மணி கட்டுவது எப்படி?

கிரிப்டோ நாணயம் (கிரிப்டோகரன்ஸி) தொடர்பாகச் சட்டம் இயற்றவிருப்பதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அப்படிச் சட்டமியற்றினால், இது போன்ற நாணயப் பரிமாற்ற முறைகள் இந்தியாவில் எந்த அளவுக்குச் சட்டபூர்வமானவை என்பதில் தெளிவு ஏற்பட்டுவிடும். அவற்றைச் சட்டபூர்வமான நாணயமாகக் கருதவில்லை என்று அரசு அவ்வப்போது கூறிவந்தாலும், இது தொடர்பில் இன்னும் குழப்ப நிலையே நீடிக்கிறது. இந்த நாணயத்தின் மதிப்பு அதிக அளவு ஏற்ற-இறக்கங்களுக்கு உள்ளாகக்கூடியவை, சட்டத்துக்குப் புறம்பான இணையதளப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுபவை, முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருப்பவை என்ற புரிதல் பலரிடமும் இருக்கிறது. என்றாலும் அரசு இன்னமும் ஒழுங்காற்று விதிமுறைகள் எதையும் உருவாக்கியிருக்கவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி 2018-ல் வங்கிகளுக்கெல்லாம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. கிரிப்டோ நாணயத்தைக் கொண்டு வணிகம் செய்பவர்களுக்கு வங்கிகள் சேவையளிக்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. எனினும் இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தியாவில் கிரிப்டோ நாணயம் தடை செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறிவந்திருந்ததால், அந்தச் சுற்றறிக்கை, அரசின் முந்தைய அறிவிப்புக்குப் பொருந்தும்படி இல்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தடை விதிக்கப்படாத ஒன்றைப் பயன்படுத்தினால் சேவையை மறுப்பது சரியல்ல என்பதே உச்ச நீதிமன்றத்தின் நிலை. தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமைப்புகள் ஏதும் கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அரசு, இது தொடர்பாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாகச் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதற்கென்று கட்டுப்பாடுகள் விதிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார். “கிரிப்டோ நாணயங்கள் உண்மையில் நாணயங்களும் அல்ல, சொத்துகளும் அல்ல, பங்குப் பத்திரங்களும் அல்ல, சரக்குகளும் அல்ல. அவற்றைப் பரிவர்த்தனை செய்பவர்களை அடையாளமும் காண முடியாது என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நேரடியான சட்ட வழிமுறைகள் ரிசர்வ் வங்கி, செபி போன்றவற்றிடம் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமானவையா என்பது பற்றி தெளிவு இல்லாத சூழலிலும், அதற்கென்று இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நாணயங்களில் மிகவும் பிரபலமான பிட்காயினின் விலை புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதாலும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் போன்றோரின் ஆதரவு பிட்காயினுக்கு இருப்பதாலும் இந்த நாணயங்கள் மீது மேலும் மேலும் கவர்ச்சி கூடிக்கொண்டுதான் போகும். ஆகவே, சட்டம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ நாணயங்களைக் கொண்டு பரிவர்த்தனைகள் செய்யும் பெரிய மனிதர்கள், அரசில் செல்வாக்கு செலுத்தி அவற்றைத் தடை செய்துவிடாமல் ஆனால் - ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை மட்டும் கொண்டுவரும்படி பார்த்துக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. கச்சிதமான ஒழுங்காற்று நெறிமுறைகளைக் கொண்டுவருவதே நல்லது. ஏனெனில், தடை என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. கிரிப்டோ நாணயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதும், இணையக் கட்டுப்பாடு நிலவுவதுமான சீனாவிலும்கூட கிரிப்டோ நாணயங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. ஆகவே, கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்குவதே நல்ல நகர்வாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x