Published : 19 Nov 2015 08:44 AM
Last Updated : 19 Nov 2015 08:44 AM

நீதிபதிகள் நியமனத்துக்குப் புதிய சட்டம் தேவை

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசு கொண்டுவந்த தேசிய நீதித் துறை நியமனச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இதன் மூலம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நீதிபதிகளை மூத்த நீதிபதிகளைக் கொண்ட சிறிய குழுவே தேர்ந்தெடுக்கும் 20 ஆண்டுகால நடைமுறை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால்தான், புதிய சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது நீதித் துறையின் சுதந்திரத்தில் தலையிடும் வகையில் இருப்பதால் ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இப்போது மக்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்போவதாகவும் புதிய நியமனங்களின்போது அந்த யோசனைகளில் சிறந்தவை ஏற்கப்படும் என்றும் நீதித் துறையினரால் கூறப்படுகிறது. நீதிபதிகள் நியமனச் சட்டம் செல்லாது என்று அறிவித்துவிட்டதால், தகுந்ததொரு மாற்று ஏற்பாட்டைச் செய்யும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு, குறிப்பாக நீதிபதிகளுக்கு இருக்கிறது. நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பு. அதன் சட்டத்தை நிராகரித்த நீதிமன்றம், இப்போது மக்களிடமிருந்து கருத்து கேட்டிருக்கிறது. நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், அரசுத் தரப்பிடமும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களிடமும் மட்டும் கேட்டு முடிவு செய்வது நியாயமாக இருக்காதுதான். ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் இதில் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு அனுபவமும் நுண்அறிவும் இருக்குமா என்பதும் சந்தேகமே.

அதேசமயம், இதைத் தவறென்றும் கூறிவிட முடியாது. நீதித் துறை தொடர்பாக மக்களின் அனுபவங்கள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன, ஏமாற்றங்கள் என்ன என்பதை அரசும் நீதித் துறையும் ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ளலாம். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளவும் வழி பிறக்கலாம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பெரியதா, நீதித் துறை பெரியதா என்று தேவையற்ற சர்ச்சையில் இறங்கத் தேவையில்லை. நம் நாட்டின் வேறுபட்ட கலாச்சாரப் பின்னணியில் நல்ல திறமையும் நேர்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்க நீதிபதிகளைத் தேர்வு செய்ய, உலகின் பிற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தேர்வு முறைகளைக்கூடப் பரிசீலிக்கலாம். இது எளிதான வேலையல்ல. ஆயிரக்கணக்கான யோசனைகள் வந்து குவியப்போகின்றன.

எப்படியிருந்தாலும் நாட்டின் நீதித் துறை, நிர்வாகம் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை ரத்துசெய்துவிட்டு அந்த இடத்துக்குத் தனக்கான சட்டத்தை நீதிமன்றமே வகுத்துக்கொண்டுவிட்டது என்றும் பேசப்படலாம். அதிலிருந்து நீதித் துறை எப்படி மீளப்போகிறது என்று தெரியவில்லை. முன்பிருந்ததைப் போலவே மூத்த நீதிபதிகளைக் கொண்டு, வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் மட்டும் மாற்றிக்கொண்டுவிட்டால் தேர்வு முறை தரமுள்ளதாக ஆகிவிடுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நீதிபதிகள் நியமனம் என்பதை நீதித் துறையின் உள்விவகாரம் என்பதைப் போலக் கையாண்டதாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நீதிபதிகள் பற்றிய சில விவரங்கள் அதிருப்தியைத் தந்ததாலும்தான் நியமன முறையே கேள்விக்குரியதானது. எனவே, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வரையறுக்கும் விதிமுறைகளைப் பின்னாளில் சட்டமாக இயற்றுவது அவசியம். நீதித் துறையின் நடைமுறை மூலம் நியமனம் நடக்க வேண்டும். ஆனால், அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x