

கரோனா பெருந்தொற்று, தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கிய நிவர், புரெவி புயல்கள், ஜனவரியில் கொட்டித் தீர்த்த மழை என்று இயற்கையின் தொடர் தாக்குதல்களில் நிலைகுலைந்து போயிருந்த விவசாயிகளுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி மிகப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்ததோடு, கால தாமதமின்றி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே, புயல்களால் பாதிக்கப்பட்ட 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக மொத்தம் ரூ.600 கோடியைச் சுமார் 5 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகக் கிடைக்கச் செய்திருந்தார். இடுபொருள் நிவாரணமும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் அளிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
காவிரிப் படுகை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்த எதிர்பாராத தொடர் மழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் மனமில்லாது விவசாயிகள் கலங்கி நின்றபோது, உரிய நிவாரணம் விரைவில் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையைப் பொங்கலுக்கு முதல் நாளே தனது அறிக்கையின் வாயிலாக விதைத்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. அறுவடைச் செலவுகூடத் திரும்பக் கிடைக்காது என்ற நிலையில், தேங்கி நிற்கும் மழைநீரில் முளைத்துவிட்ட நெற்கதிர்களை அறுக்காமல் அப்படியே உழுதுகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி அவர்களைக் கவலைகளிலிருந்து மீட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக ‘திமுக ஆட்சியேற்றதும் நகைக் கடன்கள் உள்ளிட்ட விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற வாக்குறுதியை அளித்தார். தமிழக முதல்வர் பழனிசாமியோ இப்போதே விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டார்.
தேர்தலை முன்னிட்டே அதிமுக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அது தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கியுள்ளன. தேர்தலை முன்னிட்டும்கூட இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம். பிரதான எதிர்க் கட்சியான திமுக அளித்த வாக்குறுதி மக்களின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாகவும்கூட இருக்கலாம். ஆனாலும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்தால் மட்டுமே விவசாயிகள் கடன் சுமையிலிருந்து மீண்டுவர முடியும் என்ற உண்மையை யாராலும் மறுத்துவிட முடியாது.
பொறுப்பான எதிர்க்கட்சி என்ற நிலையில், பயிர்க் கடன் தள்ளுபடி குறித்த திமுகவின் முன்னெடுப்பும் அதை ஆளுங்கட்சி விரைந்து செயல்படுத்தியதும் கால தாமதமின்றி எடுக்கப்பட்ட பாராட்டுக்குரிய நடவடிக்கைகள். அதேநேரத்தில், கடன் தள்ளுபடிக்கான வாய்ப்புகளை ஆளுங்கட்சியினர் முன்கூட்டியே அறிந்துகொண்டு, கடந்த சில வாரங்களில் முன்தேதியிட்டுக் கடன்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாகக் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவு அதிகமாக இருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசின் நல்ல நோக்கத்தையும் பயன்களையும் சிதைத்துவிடக்கூடும் என்ற கவனமும் தேவை.