Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

என்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்?

கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களின் கொடுமையான மரணம், பாக் நீரிணையில் இரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக நீடித்துவரும் தீர்க்கப்படாத சிக்கல் ஒன்றின் பிரச்சினையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இறந்துபோன நான்கு பேரில் ஒருவர் இலங்கை அகதி. நால்வரும் இலங்கைக் கடற்படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், இலங்கைக் கடற்படையினரோ கப்பற்படை கப்பல் மோதியதால் மீனவர்களின் படகு மூழ்கி அவர்கள் பலியானதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்தியத் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது குறித்து நிரந்தரத் தீர்வு காண்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தமது கூட்டுப்பணிக் குழுவின் வாயிலாக விவாதங்களைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள்ளாக இந்த வேதனைச் சம்பவம் நடந்துள்ளது. எல்லை தாண்டிச் சென்றுவிட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் கூடிய விரைவில் விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டது. இலங்கையோ சட்டவிரோத மீன்பிடிப்பால், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் என்று தம்மை நியாயப்படுத்திக்கொண்டது. எல்லை தாண்டிச் சென்ற மீனவர்களைக் கையாளும்போது வன்முறைகள் கூடாதென்றும் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தரப்பும் சேர்ந்து உடன்பாடு செய்துகொண்டன. இரண்டு நாடுகளின் கடலோரப் படைக்கும் நடுவே தொலைபேசித் தொடர்புகளை நிறுவவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அப்படியொரு தொலைபேசித் தொடர்பு இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்ட காலச் சச்சரவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும். தங்களது எஞ்சிய மீன்வளங்கள் சுரண்டப்படுகின்றன என்று இலங்கை சொல்கிறது என்பதற்காக தமிழக மீனவர்களை மீன்பிடிப் படகுகளுக்குப் பதிலாக ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களைப் பயன்படுத்தக் கோருவதும் இப்பிரச்சினைக்குத் தீர்வினை அளித்துவிட முடியாது. இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கருத்தொருமிப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளே உடனடித் தேவை.

நீண்ட காலமாக மீனவர்கள் பயன்படுத்திவரும் மீன்பிடி முறைகளை உடனடியாகத் தடைசெய்வதற்கு முன்பாக மாற்று ஏற்பாடுகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். எல்லை தாண்டிச் சென்றுவிடும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில், தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வசதியான மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள், வறுமையால் வாடும் தங்களது தொழிலாளர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடைசியில், பரிதாபத்துக்குரிய மீனவர்கள் கொல்லப்படவும் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுவரையில் அரசியல்ரீதியாக எந்தத் தீர்வும் காணப்படவில்லை. இரு நாடுகளின் மீனவர்களும் சேர்ந்து சட்டவிரோத மீன்பிடிப்பைக் கைவிடவும், நிலையான மீன்வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தங்களுக்குள்ளாகவே உடன்பாடு செய்துகொள்வதே நிலையானதும் முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x