பருப்பு விளைச்சலுக்குத் திட்டமிடல் அவசியம்

பருப்பு விளைச்சலுக்குத் திட்டமிடல் அவசியம்
Updated on
2 min read

சரியாக பண்டிகை நாட்கள் சமயத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பயறு வகைகளின் விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவதைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்திய மக்களின் பருப்புத் தேவைக்கும் உள்நாட்டில் சாகுபடியாகும் பருப்பின் அளவுக்கும் இடையிலான வேறுபாடு பெருமளவு அதிகரித்துவிட்டதால் இந்த விலை உயர்வு. பருப்பு விளைச்சலை அதிகப்படுத்த தீவிர சாகுபடித் திட்டம் தீட்டாதது, இணைய வர்த்தகம், பதுக்கல் - கள்ளச்சந்தை, அரசு நிர்வாகத்தின் மெத்தனம் எல்லாமுமாகச் சேர்ந்து பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துவிட்டன.

பருப்பு வகைகளின் குறிப்பாக, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றின் விலை ஜூலை மாதத்தில் சுமார் 25% உயர்ந்தது. பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் 30% அதிகரித்தது. இப்போது துவரம் பருப்பு கிலோ ரூ.210 வரை விற்கிறது. ஆண்டுதோறும் 50 லட்சம் டன் அளவுக்குப் பருப்பு இறக்குமதி ஆகிறது. இந்தியாவின் பருப்புத் தேவை 220 லட்சம் டன் முதல் 230 லட்சம் டன் வரை. உள்நாட்டில் சாகுபடியாவது மொத்தம் 170 லட்சம் டன்கள் மட்டுமே. பற்றாக்குறையை இறக்குமதி மூலம்தான் ஈடுகட்டிவருகிறோம்.

இந்திய விவசாயி ஒரு ஹெக்டேர் நிலத்தில் 0.5 முதல் 0.6 டன் வரைதான் துவரை கண்டுமுதல் காண்கிறார். அதாவது, ஒரு டன்னுக்கும் குறைவு. சீனத்திலும் கனடாவிலும் இதைப் போல 3 மடங்கு சாகுபடியாகிறது. அத்துடன் பருப்பு சாகுபடி செய்தால் விளைச்சலுக்கு 6 மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, கிடைக்கும் கொள்முதல் விலை, வழக்கம்போல விவசாயச் செலவைக்கூட ஈடுகட்டப் போதாது. மொத்த வியாபாரி நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்றாக வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திய விவசாயத்தின் மென்னியைப் பிடிக்கவே அரசின் எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

மிகக் குறைந்த காலத்தில் அதிக விளைச்சலைத் தரும் பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரையில் பருப்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். மத்திய, மாநில அரசுகளும் வேளாண் பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட வேண்டிய துறை இது. பருப்பு அதிகம் விளைந்தால் அவற்றை வாங்கி, பத்திரமாகச் சேமித்துவைக்கும் உலர் கிடங்குகளை அரசு நிறைய கட்டி வைக்க வேண்டும். விளைச்சல் அதிகமாகும்போது விலை சரிந்து முழு இழப்பும் விவசாயிகளின் தலையிலேயே விழுந்தால் அவர்களால் அடுத்த முறை அச்சாகுபடியில் ஈடுபட முடியாது. இதனாலும் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது. பருப்புச் சாகுபடியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பால் உற்பத்தியாளர்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இணைத்ததைப் போல இவர்களையும் தனி அமைப்பு மூலம் இணைத்து லாபம் கிடைக்கும் வழிகளைக் காட்ட வேண்டும்.

இச்சூழலில் அரசுத் தரப்பிலிருந்து சற்று நம்பிக்கையூட்டும் தகவல் வந்திருக்கிறது. நவம்பர் முதல் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்புகளை நேரடியாகக் கொள்முதல் செய்யப்போவதாக மத்திய வேளாண் துறைச் செயலர் சிராஜ் உசைன் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது.

எந்த ஒரு பொருளின் விலையும் உயரும்போதுதான் அரசு அதன் மீது கவனம் செலுத்துகிறது. அதற்கு முன்னால் திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்றவை நடப்பதே இல்லை. திட்டமிடத் தெரியாவிட்டால் நிர்வாகம் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in