

தனது அந்தரங்கக் கொள்கைகளைப் புதுப்பிக்கப்போவதாக (அப்டேஷன்) வாட்ஸப் கூறியிருந்தது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு அதன் பயனாளிகளிடையே எழுந்த எதிர்வினைகளை அடுத்து புதுப்பித்தலை வாட்ஸப் தள்ளிப்போட்டிருக்கிறது. வாட்ஸப்பின்
தகவல்களை அதன் உரிமையாளரான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் புதுப்பிக்கப்போவதாக வாட்ஸப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியது. புதிய விதிமுறைகள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு பிப்ரவரி 8 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வாட்ஸப்பிலிருந்து ஏராளமானவர்கள் வெளியேறினார்கள். இது போன்ற வெளியேற்றம் ஃபேஸ்புக்குக்குக் கெட்ட பெயர் வாங்கித்தந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில்கூட நிகழவில்லை. வாட்ஸப்பில் தங்களின் அந்தரங்கத் தகவலுக்குப் பாதுகாப்பில்லை என்று அஞ்சிய பயனர்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற தகவல் பரிமாற்றச் செயலிகளுக்கு மாற ஆரம்பித்தார்கள். ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி சமீபத்திய சில வாரங்களாக சிக்னல் செயலி இந்தியாவிலும் பல நாடுகளிலும் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இருக்கிறது. வாட்ஸப்பும் சிக்னலைப் போலவே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அந்தத் தகவலைப் படிக்க முடியாத வகையிலான சங்கேதப் பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.
ஏராளமானோரின் விமர்சனக் கணைகளுக்கு இலக்கான வாட்ஸப், இந்தப் புதுப்பித்தலால் அந்தரங்கத் தகவல்களுக்குப் பாதுகாப்பின்மை ஏற்படும் என்ற அச்சத்தைப் போக்கத் தன்னால் ஆன அளவு முயன்றுகொண்டிருக்கிறது. புதுப்பித்தல் குறித்த விளம்பரங்களை நீக்கியுள்ளது. புதிய மாற்றங்களெல்லாம் தாங்கள் எவ்வாறெல்லாம் தரவுகளைத் திரட்டிப் பயன்படுத்துகிறோம் என்பதில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவது தொடர்பானவை என்று வாட்ஸப் தெரிவித்திருக்கிறது. கோடிக்கணக்கான வர்த்தகப் பரிமாற்றங்கள் வாட்ஸப்பில் தினந்தோறும் நடைபெறுகின்றன; புதிய அந்தரங்கக் கொள்கை மாற்றங்கள் இவற்றை இலகுவாக்கும் என்றும் வாட்ஸப்பில் திரட்டப்படும் தகவல்களைக் கொண்டு ஃபேஸ்புக்கில் பிரத்யேக விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்றும் வாட்ஸப் கூறியது. தற்போது எழுந்துள்ள கடும் எதிர்வினைகளையடுத்துப் புதுப்பித்தலுக்கான காலக்கெடுவை மே 15-க்குத் தள்ளிவைத்திருக்கிறது.
வாட்ஸப்பை 1,900 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கிய ஃபேஸ்புக் அதன் மூலம் ஆதாயத்தைத்தான் எதிர்பார்க்கும் என்பதால், அதன் இலக்குகள் தள்ளிப்போனாலும் இறுதியில் தான் நினைத்ததை நிறைவேற்றாமல் விடாது. அப்படி இருந்தாலும்கூட ஐரோப்பாவில் உள்ள தனது பயனர்களிடம் இந்த மாற்றங்களை வாட்ஸப் திணிக்க முடியாது. ஏனெனில், ‘ஜிடிபிஆர்’ என்று அழைக்கப்படும் ஐரோப்பாவின் ‘ஜெனரல் டேட்டா ப்ரொடெக் ஷன் ரெகுலேஷன்’ என்ற கண்காணிப்பு அமைப்பானது செயலி களுக்கிடையே இதுபோன்ற தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கிறது. உலகின் வேறெந்தப் பகுதிகளை விடவும் ஐரோப்பியப் பயனர்கள் தரவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலும் அதுபோன்ற சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
இந்தியாவிடம் தற்போது இருப்பது ஒரு சட்டத்தின் வரைவு வடிவம்தான். பல ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது. நூறு கோடி இந்தியர்களின் அந்தரங்க உரிமையை வணிக நலன்களிடம் தாரைவார்த்துவிடக் கூடாது. ஐரோப்பாவைப் போல இந்தியாவும் இதுபோன்ற விஷயங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றி அந்தரங்க உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.