Published : 05 Oct 2015 08:35 AM
Last Updated : 05 Oct 2015 08:35 AM

திசைகாட்டி முள் எத்திசையைக்காட்டுகிறது?

ஐக்கிய நாடுகள் சபையின் பேரவைக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியாவைச் சாடியிருப்பதை என்னவென்று சொல்வது? இது வழக்கமான பல்லவிதான்; அதிலும் சுருதி பேதம். ஆனால், இந்திய அணுகுமுறை கவனிக்க வேண்டியதாகிறது.

காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் இருதரப்புப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் நவாஸ் ஷெரிஃப். காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை மாறவில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு நடந்தால், அது பாகிஸ்தான் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க்கில் ஒரே விடுதியில் தங்கியபோதும் மோடியும் ஷெரீஃபும் சந்தித்துப் பேசவில்லை. உச்சி மாநாட்டில் ஒருவரை ஒருவர் பார்த்ததும் மரியாதைநிமித்தம் கைகளை ஆட்டிக்கொண்டதோடு முடிந்தது. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்துப் பேசுவதாக இருந்த கூட்டம் ஆகஸ்டில் ரத்துசெய்யப்பட்ட பிறகு, உறவு சுமுகமாகவில்லை என்பதையே இது காட்டியது. மேலும், ஷெரீஃபின் பேச்சுக்கு ஐ.நா. சபையில் அளித்த பதில், இந்தியா தன் கடந்த கால மரபிலிருந்து பெரிதும் விலகுவதுபோலவும் தெரிந்தது.

ஷெரீஃப் “காஷ்மீர் ஆக்கிரமிப்பிலிருக்கும் பகுதி” என்று குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளிக்கும்போது, “பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிதான் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி” என்று சுட்டிக்காட்டியதோடு, அங்கு வாழும் மக்களின் அவல நிலை குறித்தும் விவரித்தது இந்தியா. கூடவே, காஷ்மீரிலிருந்து யாராவது வெளியேற வேண்டுமென்றால், அது பாகிஸ்தான்தான் என்பதையும் திட்டவட்டமாகக் கூறியது. இரு நாடுகளுக்கும் இடையில் உறவு சுமுகமாக நான்கு அம்ச யோசனை ஒன்றை ஷெரீஃப் தெரிவித்திருந்தார். காஷ்மீரிலிருந்தும் சியாச்சின் பனிமுகட்டிலிருந்தும் இந்திய ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அந்த யோசனைகளை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துவிட்டது. இந்த யோசனைகள் இந்தியாவிடம் நேரடியாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை சர்வதேச கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டது. இந்தச் சூழலில் இந்த நிராகரிப்பு இயல்பானது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா பதில் அளித்திருக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

பல தசாப்தங்களாகவே ஐ.நா. பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எப்படியாவது விவாதப் பொருளாக்கிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் முயற்சிக்கிறது. எனினும், 1971-க்குப் பிறகு, ஐ.நா. சபையின் எந்த அமைப்பிலும் காஷ்மீர் விவகாரம் பேசப்படவில்லை. மேலும், பாதுகாப்பு ஆணையத்தில் உள்ள எல்லா நாடுகளுமே, “இது இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை” என்றே கூறிவந்திருக்கின்றன. இந்தச் சூழலில், திடீரென காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா பேசியிருப்பது புதிராக இருக்கிறது. ஒருபுறம் பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் இந்தியா, மறுபுறம் நம்முடைய பிரச்சினையில் சர்வதேசப் பார்வை விழும் சூழலை ஏற்படுத்திக்கொள்வது தேவையற்றது. எப்படியும் பேச்சுதான் தீர்வு. பேச்சை நோக்கி எதிர்த் தரப்பை ஈர்ப்பதில்தான் ராஜதந்திரத்தின் வெற்றி இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x