

அமெரிக்கா தன்னைப் பற்றி ‘இந்த உலகிலேயே ஜனநாயகமான நாடு’ என்று உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தில் பெரும் தெறிப்பு விழ ஆரம்பித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஒரு வன்முறைக் குழு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது நிகழ்த்திய தாக்குதல் மேற்கண்ட பிம்பத்தைப் பார்த்துப் பரிகசிக்கிறது. ட்ரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டுவர, காவல் துறையினர் ஸ்தம்பித்துபோய் நின்றுவிட்டனர். 2020 அதிபர் தேர்தலின் முடிவுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காகக் கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பெஞ்சுகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் வன்முறைக் கும்பல் அப்புறப்படுத்தப்பட்டது; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் கூடினார்கள், பொறுப்புகள் ‘முறைப்படி கைமாறுவதற்கு’ தான் ஒத்துழைப்பதாக ட்ரம்ப் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார். மிக முக்கியமான சமூக ஊடகங்களெல்லாம் ட்ரம்ப்பின் கணக்கை முடக்கியுள்ளன. தங்களது குடிமைத்துவ ஒற்றுமை தொடர்பான கொள்கைகளை மீறியதற்காகவும், வன்முறையைத் தூண்டியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 5-ல் ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இருவர் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தக் குழுவினர் வன்முறையில் இறங்கினாலும், இந்தத் தாக்குதலுக்குச் சமூக ஊடகங்கள் மூலம் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 3-ல் நடந்த தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காததால் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. அவர்களின் வெற்றியால் ஜனநாயகக் கட்சியினருக்கு செனட்டில் 50 இடங்கள் கிடைத்துள்ளன, இது மேலவையில் ஆதிக்கம் செலுத்துவதற்குச் சமமாகும். ஏனெனில், தற்போது துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ் இரண்டு பக்கமும் சமமான பலம் இருக்கும்போது ஒரு முடிவை எட்டுவதற்கான தீர்மானகரமான வாக்கைச் செலுத்துவார்.
ஜனவரி 20-ல் 46-வது அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்குக் கடுமையான பணிகள் காத்திருக்கின்றன. ஜனவரி 6 அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைத் தாக்குதல், 2020 தேர்தலைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் இணையத்திலும் பொதுவெளியிலும் நடந்த வெறுப்புப் பிரச்சாரம் போன்றவையெல்லாம் அமெரிக்கா எந்த அளவுக்குப் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதற்குச் சான்றாகும். ஜனநாயகத்தின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட முன்னுதாரணமற்ற தாக்குதலானது, கடந்த நான்கு ஆண்டு கால ட்ரம்ப் ஆட்சியின் விளைவே. தேர்தல் பிரச்சாரத்தின்போது காணப்பட்ட பதற்றத்தின் சூறாவளியின் நடுவே தென்பட்டது அமெரிக்க வெள்ளை நடுத்தர வர்க்கத்தினர், உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆகியோரின் அச்சம்தான். இந்த அச்சமானது அமெரிக்கப் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்பட்ட தவிர்க்கவியலாத மாற்றங்கள் குறித்தவை. குடியேறியவர்கள், உலகமயமாதல் போன்ற பிரச்சினைகளை முன்னிட்டு அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்திருந்தது. குறுகிய அரசியல் நலன்களுக்காக ட்ரம்ப் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, பிளவேற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார். இதனால் துண்டுபட்டுக் கிடக்கும் சமூகத்தைச் சமநிலைப்படுத்துதல், புலம்பெயர்வோரையும் ஆப்பிரிக்க - அமெரிக்கர்களையும் அரவணைத்தல் போன்ற கடமைகள் பைடனின் முன் இருக்கின்றன. கூடவே, கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்களைத் தாண்டி, ட்ரம்ப் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து மீளக்கூடிய அமெரிக்காவை பைடன் வடிவமைக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.