

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மிகவும் பாதுகாப்பான பகுதி என்று கருதப்படும் இடத்தில் சீசர் டவல்லா என்ற இத்தாலியத் தன்னார்வத் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்றது நாங்கள்தான் என்று கூறிக்கொண்டவர்கள் தங்களை ‘இஸ்லாமிய நாடு’(ஐ.எஸ்.) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப் படுத்திக்கொண்டிருக்கின்றனர். இது உண்மைதானா என்று தீவிர விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும். ஒருவேளை அவர்கள் சொல்வது உண்மை என்றால், தெற்காசிய நாடுகளிலும் கால் பதித்து விட்டது ஐ.எஸ். என்று உணர வேண்டும். சிரியா, இராக்கில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று கருதிய ஐ.எஸ். இயக்கம் இங்கும் வேர் பரப்ப முயல்கிறது. ஆஃப்கனுக்குப் பிறகு, அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கும் நாடு வங்கதேசம். வங்கதேசத்தை ஒட்டிதான் நாமும் இருக்கிறோம்.
இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ். அமைப்பை எதிர்ப்பவர்கள், விரும்பாதவர்கள் என்று திட்டவட்டமாகக் கூறிவிடலாம். இந்திய முஸ்லிம்கள் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவர்கள். மேற்காசியாவில் செல்வாக்குடன் திகழும் வஹாபியம், சவூதியில் பிரபலமாகவுள்ள சலாஃபியம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் அதிக ஆதரவு கிடையாது. இந்த இரு இயக்கங்களின் போக்குகளைத்தான் பெருமளவு உள்வாங்கியிருப்பதாக ஐ.எஸ். கூறிக்கொள்கிறது. ஆயினும், இந்தியாவில் மதப்பழமைவாதத்துக்கும் ஆதரவு காட்டுவோர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஐ.எஸ். அமைப்பை உள்ளூர ஆதரிக்கும் / அதில் சேர விரும்பும் சில நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைச் சமீபத்திய செய்திகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன. ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்றதாக அல்லது விரும்பியதாக வெளிவரும் சிலரைப் பற்றிய தகவல்களும் அவர்களுடைய பின்னணியும் நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளின் புலனாய்வில் இருக்கிறது. இத்தகைய சூழலில், ஐ.எஸ். போன்ற ஒரு அமைப்பை முளைவிடாமல் தடுக்கப் பன்மை நோக்கில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களைக் கண்காணிக்க இந்திய உளவு அமைப்புகள் பெரும்பகுதி இப்போது தொழில்நுட்ப வழிமுறை களைத்தான் நம்பியிருக்கிறது. இந்திய உளவுத் துறை தன்னுடைய களப் பணியாளர்களை அதிகப்படுத்துவதோடு, களத்தில் புதிய உத்திகளுடன் அவர்கள் முன்னகர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுடைய பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ஐ.எஸ். அமைப்பின் செல்வாக்கை வெறும் பாதுகாப்புப் படைகளால் மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரின் கலந்தாலோசனையுடன் இளைஞர்களிடையே இத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எப்போதுமே, பழைய விஷயங்களைக் கிளறிக் கிளறிப் பேசுவதால் சமூகங்களுக்கிடையே பகைமையும் இடைவெளியும்தான் அதிகமாகும். அதைவிடுத்து, ‘நாம் அனைவரும் இந்தியர்; எல்லோருக்குமான முன்னேற்றம்தான் நம் அனைவரின் குறிக்கோளும்’எனும் இலக்கோடு பணியாற்றும் முனைப்பை அரசியல் இயக்கங்களிடம் உருவாக்க வேண்டும். முக்கியமாக, வெறுப்பு அரசியல் பேசும் இயக்கங்கள் எதுவானாலும் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறு பிரச்சாரங்கள் நம் மக்களிடையே பிரிவினைகள், மோதல்களை உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல் இத்தகைய அந்நிய நச்சு சக்திகளும் அதே வெறுப்பை விதைத்து ஊடுருவ வழிவகுக்கும் எனும் அபாயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். விஷமிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துத் தளங்களிலும் ஒருங்கிணைந்து கையாள வேண்டிய விவகாரம் இது!