

சென்னைவாசிகளுக்கு ஒரு சின்ன மழை கொடுத்த சந்தோஷத்தை வேறு எது ஒன்றாலும் நேற்றைக்குக் கொடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. வெப்பத்தில் புழுங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அவ்வளவு இதமான ஆறுதலைத் தந்திருக்கிறது மழை.
சென்னை நகரம் வெப்பத்தில் தகிக்க வெயிலும் வெப்பநிலையும் உச்சபட்ச அளவை நோக்கி நகர்வது மட்டும் காரணம் இல்லை. வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆதாரங்களையும் வேகவேகமாக அழித்துக்கொண்டிருக்கிறோம் அல்லது அந்த அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடக்கிறோம் என்பதும் முக்கியமான காரணம். சென்னையில் மட்டும் அல்ல; நாடு முழுவதும் இதுதான் நிலை.
ஐம்பதாண்டுகளுக்கு முன்கூட எவ்வளவு பசுமையான, ரம்மியமான நகரமாக இருந்தது சென்னை! அதற்கு ஆதாரமாக சாலைகளின் இருபுறங்களிலும் கவிந்து நிழல் தந்த அந்த மரங்கள் எங்கே? ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியின் பெயராலும் பல்வேறு திட்டங்களின் பெயராலும் ஆயிரக் கணக்கான மரங்களை வெட்டித்தள்ளுகிறோமே, பதிலுக்கு எத்தனை மரக்கன்றுகளை நடுகிறோம்? சரி, ஒரு சின்ன மழை இவ்வளவு சந்தோஷத்தை அள்ளிக்கொண்டு வருகிறதே, அதற்காகவாவது உரிய கவனத்தை அளிக்கிறோமா, அதையாவது நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா?
நம்மை உய்விப்பதற்காக இந்த மழைதான் எத்தனை நீண்ட பயணத்தை ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்கிறது? பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து புறப்படும் காற்று வடக்கு நோக்கி 8,000 கி.மீ. பயணித்து ஆசியாவை உரிய காலத்தில் அடைகிறது. அப்படி வரும் வழியில் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து வருகிறது. பருவ மழை சரியாகப் பொழிய பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் காற்று ஒரு காரணம் என்றால், இந்தியாவில் அடிக்கும் வெயில் அடுத்த காரணம். வெப்பக்காற்று மண்டிய இந்தியக் கடலோரம் வழியாக நீராவி மிகுந்த குளிர்காற்று இந்தியா முழுக்கப் பரவுகிறது. சாதாரண ஆண்டுகளில் பருவக்காற்று நான்கு மாதப் பயணத்துக்குப் பிறகு கேரளக் கடற்கரையை ஜூன் மாதத்தில் அடைகிறது. இந்தப் பருவமழைதான் நாட்டின் நூற்றுக் கணக்கான பெரிய நீர்த்தேக்கங்களையும் பல்லாயிரக் கணக்கான ஏரிகளையும் லட்சக் கணக்கான குளங்களையும் நிரப்புகிறது. இந்தத் தண்ணீர்தான் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மின்சார உற்பத்திக்கும் ஆதாரமாகிறது. இவ்வளவு முக்கியத்துவம் மிக்க மழையை நகரவாசிகள் எப்படி அணுகுகிறோம்?
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்கு வெளியூர் நீர்நிலைகளையே நம்பியிருக்கின்றன. நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் கீழே போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் இந்த நிலையில்கூட நீராதாரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், எப்போது கவலைப்படப்போகிறோம்?
பொதுநலனை விடுவோம்… சுயநலம் சார்ந்தாவது இதை யோசிக்க வேண்டுமா, வேண்டாமா? சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஏனைய விஷயங்களில் காட்டும் அக்கறை ஏன் மழைநீர் சேகரிப்பில் எதிரொலிக்கவில்லை? வழிகாட்ட வேண்டிய, வலியுறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இது நம் ஒவ்வொருவரின் கடமை. மரம் வளர்ப்போம், மழைத்துளிகளை மண்ணுக்குள் சேகரிப்போம்!