

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் முழுமையாக இயங்குவதற்கு அனுமதித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சுகாதாரத் துறை நிபுணர்களிடத்திலும் மருத்துவர்களிடத்திலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தாண்டு, காணும் பொங்கலையொட்டி சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டவெளியில் மக்கள் கூடுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, குளிர்வசதி செய்யப்பட்ட மூடிய அரங்குகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தனிமனித இடைவெளியின்றிப் படம் பார்க்க அனுமதித்திருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கரோனாவுக்குத் தடுப்பூசி இன்னும் விநியோகிக்கப்படாத நிலையில், கரோனாவின் உருமாறிய வடிவம் ஒன்று இந்தியாவுக்குள்ளும் பரவிவரும் நிலையில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பது இயல்பானதுதான்.
கரோனா பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் திரைப்படத் துறையும் ஒன்று. வெளிப்புறப் படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. உட்புறப் படப்பிடிப்புகளும்கூட கடந்த சில மாதங்களாக அதுவும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு திரைப்படத்தின் உருவாக்கத்தின் பின்னணியிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்ற வரம்பு நீக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களின் உருவாக்க நிலையில், அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கப்பட்டது. அதே நிலையில், பெருமளவிலான முதலீட்டில் படமாக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் உத்தேசித்துள்ள கால அளவுக்குள் வெளிவந்தால் மட்டுமே தங்களது தயாரிப்புச் செலவுகளை ஈடுகட்டிக்கொள்ள முடியும் என்பதும் எதார்த்தமான உண்மை. திரைப்படத் தயாரிப்பு என்பது பெரும்பாலும் வட்டிக்கு வாங்கப்பட்ட தொகையிலிருந்தே நடந்துவருகிறது. அதைக் கருத்தில் கொண்டே, திரையரங்கங்கள் முழுமையான இருக்கைகளுடன் இயங்குவதற்கு அரசு அனுமதித்திருக்கக் கூடும்.
திரைப்படத் தொழில் துறையைப் பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில், இதுவரையிலான கடுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் பயன் கேள்விக்குறியாகிவிடக்கூடும் என்பதையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும். பொது முடக்கத்தால் திரைப்படத் தயாரிப்பாளர்களும் அத்தொழிலைச் சார்ந்திருக்கும் பல்துறைக் கலைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. கேளிக்கை வரியின் மூலமாக வருமானம் ஈட்டிய அரசு, ஆபத்துக் காலத்தில் திரைப்படத் தொழில் துறையினருக்குப் பல்வேறு வகைகளிலும் உதவுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு வட்டி தவிர்ப்பு, குறிப்பிட்ட கால அளவுக்குக் கேளிக்கை வரி ரத்து, திரைப்படத் தொழிலாளர்களுக்குக் கடன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அரசு பரிசீலிக்கலாம். அத்துறையைச் சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளிடையே கலந்து பேசியும் திட்டங்களை வகுக்கலாம். ஆக்கபூர்வமான இத்தகைய திட்டங்களைத் தவிர்த்துவிட்டு திரையரங்குகளை முழுமையாகத் திறப்பது என்பது எதிர்மறையான விளைவுகளுக்குக் காரணமாகிவிடக்கூடும். திரைப்படத் தொழில் துறையினருக்கு உதவிசெய்யும் நல்லெண்ணத்தோடு கூடிய இந்த அறிவிப்பு, அத்துறைக்குக் கேடுபயக்கவும் காரணமாகிவிடக்கூடும். திரையரங்குகள் முழுமையாக இருக்கைகளுடன் இயங்குவதை இன்னும் சில நாட்களுக்குத் தள்ளிவைப்பதே விவேகமான முடிவு.