Published : 02 Oct 2015 09:00 AM
Last Updated : 02 Oct 2015 09:00 AM

ஊதிய உயர்வு வேண்டியதுதான்...வேலையையும் பாருங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகளை நிர்ணயிக்க ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவு மிகவும் கால தாமதமானது என்றாலும், வரவேற்கப்பட வேண்டியது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்கும் குழு சுயேச்சையான, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக அமையும் என்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள அனைத்திந்திய கொறடாக்கள் மாநாட்டின்போது இது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது. நல்ல விஷயம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்போது மாதந்தோறும் ரூ.50,000 ஊதியம், தொகுதிப்படி ரூ.45,000, உணவு மற்றும் இதர சொந்தச் செலவுகளுக்காக ரூ.15,000 வழங்கப்படுகிறது. தொகுதி தொடர்பான பணிகளை மின்னச்சு செய்வது, தொகுப்பது, பதில் எழுதுவது, உரிய துறைகளுக்குக் கடிதம் எழுதுவது போன்ற பணிகளுக்காக மாதம் ரூ.30,000 வழங்கப்படுகிறது. அவை நடைபெறும் நாட்களிலும் ஆலோசனைக்குழு கூட்ட நாட்களிலும் தினப் படி வழங்கப்படும். அத்துடன் போக்குவரத்துக்கான படியும் உண்டு. 2010-க்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள் உயர்த்தப்படவில்லை. பிரிட்டனில்தான் இப்போது ‘நாடாளுமன்ற நிலை ஆணையம்’என்ற, சட்டத்தால் இயற்றப்பட்ட சுயேச்சையான அமைப்பு ஊதியம், படிகளை நிர்ணயிக்கிறது.

உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஊதியமும் படிகளும் மிகவும் குறைவு என்பதே உண்மை. ஊதியமும் படிகளும் உயர்த்தி வழங்கப்பட்டால்தான் அவர்களால் ஊக்கமாகவும் பிறரின் கையை எதிர்பார்க்காமல் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். சரி, எந்த ஒரு பணி யிலும் இப்படி ஊதிய உயர்வு தொடர்பாகப் பரிசீலிக்கும்போது, கூடவே சம்பந்தப்பட்டவர்களின் செயல்பாடுகள், நிறை - குறைகள் பரிசீலிக்கப்படுவதும் இயல்பானது. அந்த வகையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டால், என்ன மாதிரியான மதிப்பீடுகளுக்கும் விளைவுகளுக்கும் அது வழிவகுக்கும்?

முதலில் மக்கள் நம்முடைய பிரதிநிதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? “அரசியல்வாதிகள் என்றாலே, சுயநலவாதிகள்; பணத்தாசை பிடித்தவர்கள்; ஊழல்வாதிகள்” என்றெல்லாம் இன்றைக்கு எண்ணங்கள் பரவுவதற்கான காரணம் யார்? உள்ளூரிலிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் தொடங்கி எல்லா அரசியல்வாதிகளுமே இதற்கான பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்றாலும், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இதில் கூடுதல் பொறுப்புணர்வும் கடமையும் இருக்க வேண்டும் அல்லவா? ஏனையோருக்கெல்லாம் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டியவர்கள் அல்லவா? வசதியானவர்கள் சமையல் காஸ் மானியத்தை விட்டுத்தாருங்கள் என்று பிரதமர் வேண்டுகோள் விடுக்கும்போது, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்வினை என்ன? குறைந்தபட்சம் தங்களுடைய நாடாளுமன்ற உணவக மானியத்தைக்கூட விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை இல்லையே, ஏன்?

இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளோடு தொடர்புடைய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். மாறாக, அவர்களுடைய மனோபாவத்தின் வெளிப்பாடுக்கான சான்றுகள். நாடாளுமன்றத்திலேயே லஞ்சப் பணம் கட்டுக்கட்டாகக் காட்டப்பட்டதைப் பார்த்தோம். ஊழல் புரையோடி அழித்த மாண்புகளை மீட்டெடுக்க நம்முடைய உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அவைகளில் எத்தனை நாட்கள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கின்றன? எத்தனை பேர் முறையாக வருகின்றனர்; எத்தனை பேர் விவாதங்களில் பங்கேற்கின்றனர்? மக்களைச் சந்திப்பவர்கள் எத்தனை பேர்? ஊதிய உயர்வுக்கு ஆசைப்படுபவர்கள் தங்கள் வேலையிலும் செயல்பாடுகளிலும் கொஞ்சமேனும் கவனம் செலுத்த வேண்டும். சுயபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x