

ஏப்ரல் 5, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1 முதனிலைத் தேர்வு கரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு, 2021ஜனவரி 3 அன்று நடத்திமுடிக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் அறிவிக்கையில் குறிப்பிடப்படுவதைக் காட்டிலும் தேர்வு முடிவு வெளியாகும்போது பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும்கூடும். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டதில் 3 பணியிடங்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பே குறைக்கப்பட்டிருக்கின்றன. பயிற்சி வகுப்புகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் படித்த மாணவர்கள், அதையொட்டி தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்திருந்த நிலையில், பெருந்தொற்று அச்சத்தின் காரணமாகச் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த மையங்களுக்கு அவர்கள் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது. தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியிருந்திருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சில டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின்போது விடைத்தாள்கள் தவறாகக் கையாளப்பட்டதாக விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாதவண்ணம் டிஎன்பிஎஸ்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, விடைத்தாள்களில் தேர்வர்களின் கையெழுத்துடன் பெருவிரல் ரேகையையும் பதிவுசெய்யும் புதிய நடைமுறை வரவேற்கத்தக்க ஒன்று. ஏற்கெனவே, எஸ்எஸ்சி தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் தங்களது நிரந்தரத் தேர்வர் பதிவில் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகளின் மூலமாக ஆள்மாறாட்டங்களுக்கான வாய்ப்பு இல்லாமலாகிறது.
2021 தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டுள்ளதும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வருடாந்திரத் தேர்வு அட்டவணையில் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வழக்கம் இருந்தது. மிகக் குறைவான பணியிடங்களுக்குத் தயாராகும் மாணவர்கள் முன்கூட்டியே தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள அது உதவியாக இருந்துவந்தது. டிஎன்பிஎஸ்சி அவ்வாறான உத்தேசப் பணியிட எண்ணிக்கையை அறிவிக்கும் வழக்கத்தைத் தொடர வேண்டும்.
2020-ல் திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், உச்சபட்ச வயது வரம்பைக் கடந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத் தமிழக அரசும் பணியாளர் தேர்வாணையமும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2020-ல் அறிவிக்கப்பட்ட குரூப்-1 தேர்வு இன்னும் நிறைவடையாத நிலையில், அடுத்த குரூப்-1 அறிவிப்புக்கு மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டியிருக்கும். இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் வயது உச்சவரம்பைத் தாண்டிய மாணவர்களுக்கு உரிய தளர்வுகள் அளிக்க வேண்டியது அவசியம். வருடாந்திரத் தேர்வு அட்டவணையின்படி, அடுத்த சில மாதங்களில் குரூப்-2 தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 2020-ல் வயது உச்சவரம்பைத் தாண்டிய பொதுப் பிரிவு மாணவர்கள், இந்த ஆண்டு அத்தேர்வை எழுத முடியாமல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 2020-ல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாததைக் கருத்தில்கொண்டு வயது உச்சவரம்பைக் கடந்த மாணவர்களுக்கு அடுத்து நடக்கப்படவிருக்கும் தேர்வுகளில் உரிய தளர்வுகளை அளிக்க வேண்டியது அவசியம்.