சமத்துவப் பார்வையுடன் ஆட்சி தொடங்கட்டும்; வாழ்த்துகள் கட்க பிரசாத்!

சமத்துவப் பார்வையுடன் ஆட்சி தொடங்கட்டும்; வாழ்த்துகள் கட்க பிரசாத்!
Updated on
2 min read

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கட்க பிரசாத் ஒளி அந்நாட்டின் 38-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். அரசியல் சட்டத்தை இயற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்ட சட்டசபை அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருப்பதும் புதிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்ட பிறகு அவர் முதல் பிரதமராவதும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அரசியல் சட்டத்தில் இப்போதும் பல குறைகள் இருந்தாலும், மிக நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருந்த புதிய அரசியல் சட்டமியற்றும் பணி நிறைவுற்ற நேரத்தில் அவர் புதிய பொறுப்புக்கு வந்திருக்கிறார். மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நேபாளம் மாறிய பிறகு ஏனைய தலைவர்கள் உற்சாகம் குன்றி களத்தில் நின்றபோது, துடிப்புடன் பணியாற்றியவர்களில் முக்கியமானவர் கட்க பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டும் இன்றி நேபாள மன்னர் குடும்பத்து விசுவாசிகளும் இணைந்தே கட்க பிரசாத் ஒளியைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நேபாளத்தின் வரலாற்றில் முக்கியமான ஒரு காலகட்டம் இது. புதிய பொருளாதாரச் சூழலில் ஏற்கெனவே நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நேபாளம் சமீபத்திய பூகம்பத்துக்குப் பிறகு பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. புதிய அரசியல் சட்டத்தில் காணப்படும் சில குறைகள் உள்நாட்டில் சச்சரவுகளையும் பிளவுணர்வையும் உருவாக்கியிருக்கிறது. அரசியல் சட்டக் குறைகளைக் களைய வலியுறுத்தித்தான் சமவெளிப் பிரதேசத்தில் வசிக்கும் மாதேசிகள் கிளர்ச்சி நடத்தினர். புதிய அரசியல் சட்டம் தங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்க முயல்வதாகவும், தங்களுடைய அரசியல் செல்வாக்கு நசுக்கப்படுவதாகவும், மக்கள் மன்றங்களில் தங்களுடைய பிரதிநிதித்துவம் திட்டமிட்டு குறைக்கப்படுவதாகவும் மாதேசிகளும் சிறுபான்மைக் குழுவினரும் கிளர்ச்சி நடத்தினர். இக்குறைகளை நீக்க அரசியல் சட்டம் மீண்டும் மாற்றி எழுதப்பட வேண்டும் அல்லது அரசியல் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். உண்மையான அரசியல் கூட்டமைப்பு நாடாக நேபாளம் இருக்க வேண்டும் என்றால் புதிய மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களும் சுயாட்சியும் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். நேபாளத்தின் மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக உயர் சாதியினராகக் கருதப்படுபவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் அரசியல் சட்டம் இருப்பதாகவும் மாதேசிகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை நேபாளம் பரிசீலிக்க வேண்டும். புதிய பிரதமர் முன்னுள்ள முக்கியமான விஷயங்களில் ஒன்று இது.

நேபாளத்துக்கு நெருக்கமான கூட்டாளியான இந்தியாவும் இதை உணர்த்தியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதிய நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் சூசகமாக இதைக் குறிப்பிட்டிருக்கிறார். “நேபாள அரசுக்கும் மக்களுக்கும் தேவைப்படும் எல்லா உதவிகளையும் அளிக்க இந்தியா தயார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த வாழ்த்துச் செய்தியில், “நேபாளத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட அனைத்துத் தரப்பு மக்களையும் புதிய பிரதமர் அரவணைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றும் நாசூக்காகக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர். ஒரு நாட்டின் உண்மையான மக்களாட்சி அதன் அனைத்துத் தரப்புக் குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை அளிப்பதிலிருந்தே தொடங்குகின்றன. கம்யூனிஸப் பின்னணியில் வந்திருக்கும் கட்க பிரசாத் சர்மா ஒளி தன் பணியை அங்கிருந்தே தொடங்குவார் என்று நம்புவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in