

ஒரு சட்டப்பேரவைத் தேர்தல் இதுவரை இத்தனை அமளிதுமளிப்பட்டதில்லை. பிஹார் அத்தனை முக்கிய களமாகிவிட்டது. ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலைத் தனக்கான பலப்பரீட்சைக் களமாகப் பிரதமர் நரேந்திர மோடி மாற்றிக்கொண்டதிலிருந்து தொடங்கின எல்லாமும். தலைநகர் பாட்னாவில்தான் மத்திய அமைச்சரவையே செயல்படுகிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்குச் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் 10 மத்திய அமைச்சர்கள் வரை முகாமிட்டு சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திட்டவட்டமான பெரும்பான்மை வலு இல்லாமல் இழுபறி நிலைமை ஏற்பட்டால் அது பிஹார் மாநிலத்துக்கும் நாட்டுக்குமே நன்மையைத் தராது. ‘பிமாரு’(பின்தங்கிய) மாநிலங்களில் ஒன்று என்று கேலி பேசப்பட்ட பிஹார் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிலிருந்து விடுபட்டு வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியது. அதன் பொருளாதார வளர்ச்சி, தேசிய சராசரியைவிட வேகமாகவே இருக்கிறது. மாநிலப் பொருளாதாரத்தில் அடித்தள ரீதியாகவே மாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன. ஒரு காலத்தில் வேளாண்மையை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பிஹார், இப்போது உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சாலை மற்றும் தகவல் தொடர்பு வசதி, அடித்தளக் கட்டமைப்பில் மேம்பாடு, அதிகரித்துவரும் கல்வி ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள்.
ஆனால், இந்த வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்புக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மனிதவள மேம்பாட்டில் பிஹார் தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. சிசு மரணம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் ஆகியவற்றில் தேசிய விகிதத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்ப்பிலும் பெண் கல்வியிலும் பிஹார் தொடர்ந்து பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பிஹாரின் இப்போதைய வளர்ச்சிக்குக் காரணம், அங்கு 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நிலவுவதும், நிர்வாகத்தில் ஏற்பட்ட சீரமைப்பும்தான் என்பதை மறுக்க முடியாது.
பிஹாரில் இயற்கை வளங்களுக்குக் குறைவே இல்லை. மக்கள்தொகையிலும் 40.1 சதவிகிதம் 14 வயதுக்கும் குறைவானவர்கள். இவ்விரண்டையும் இணைத்துச் செயல்படுத்தினால் பிஹார் முதன்மை மாநிலமாக வாய்ப்பு இருக்கிறது. இளம் பிஹாரிகளுக்குத் தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிப்பது பிஹாருக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் சவாலான வேலை. ஆனால், பிஹாரில் இப்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்க்கும்போது விவாதங்களோ, அக்கறைகளோ இதைப் பற்றியெல்லாம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முந்தைய தேர்தல்களில் எதிரொலித்த அதே சாதி சார்ந்த, மதம் சார்ந்த சவால்களும் பேச்சுகளும்தான் இப்போதும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகள் அனைத்துமே வெவ்வேறு விதமான முடிவுகளைத்தான் தெரிவிக்கின்றன. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பெருங்கூட்டணியும், பாஜக கூட்டணியும் தலா 40% வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரு அணிகளுக்கும் நிச்சயமாக எத்தனை இடங்கள் கிடைக்கும், யார் வெல்வார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தாண்டி சாதி/மத ஓட்டுக் கணக்குகளே ஜெயிக்கப்போகின்றன என்பதை மட்டும் எல்லாக் கணிப்புகளும் ஒரே மாதிரி சொல்கின்றன. இந்த நிதர்சனம்தான் சுடுகிறது!