அபயா வழக்கு: காலம் தாழ்ந்த நீதி

அபயா வழக்கு: காலம் தாழ்ந்த நீதி
Updated on
1 min read

கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அபயா கொலைவழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாதிரியார் தாமஸ் கொட்டூர், அருட்சகோதரி ஸெஃபி ஆகிய இருவருக்கும் இந்த வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது காலம் தாழ்ந்த நீதிதான் என்றாலும் இந்த அளவிலாவது நீதி கிடைத்திருக்கிறதே என்ற ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. அபயாவின் குடும்பத்தினரில் தற்போது உயிரோடு இருப்பவரான அவரது சகோதரருக்கும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீதிக்காகப் போராடியவர்களுக்கும் கிடைத்த வெற்றி இது.

1992-ல் 19 வயதான அபயா அவர் தங்கியிருந்த ‘புனித பத்தாவது பையஸ் கான்வென்ட்’டின் விடுதிக் கிணற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதிரியார் தாமஸ் கொட்டூரும் அருட்சகோதரி ஸெஃபியும் பாலுறவில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பக்கம் வந்த அபயா அதைப் பார்த்தது அவர் கொல்லப்படுவதற்குக் காரணமானது. அந்த வழக்கைக் காவல் துறையும் குற்றப் பிரிவினரும் தற்கொலை என்று அவசர அவசரமாக முடிக்கப் பார்த்தனர். ஆனால், செயல்பாட்டாளர் ஜோமோன் புத்தன்புரக்கல் நடத்திய அமைப்பு நீதித் துறையின் தலையீட்டைக் கோரியது. இதன் விளைவாக இந்த வழக்கை 1993-ல் சிபிஐ தன் கையில் எடுத்துக்கொண்டது.

காவல் துறை ஆரம்பத்தில் சேகரித்த ஆதாரங்கள் பிற்பாடு அழிக்கப்பட்டுவிட்டதால் இந்த வழக்கில் எந்தத் திசையில் செல்வதென்று சிபிஐ தடுமாறிக்கொண்டிருந்தது. 1996-லிருந்து 2005 வரை இந்த வழக்கை முடித்துவிடலாம் என்று சிபிஐ மூன்று முறை மனு அளித்தது. ஆனால், நீதிமன்றம் இதற்கெல்லாம் இணங்கவில்லை. 2007-ல் பாதிரியார் கொட்டூர், அருட்சகோதரி ஸெஃபி, பாதிரியார் ஜோஸ் பூத்துருக்கயில் ஆகிய மூவருக்கும் உண்மையறியும் சோதனை நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து சிபிஐயின் நந்தகுமாரால் கைதுசெய்யப்பட்டனர். தடயவியல் பட்டை சோதனை (ஸ்வாப் டெஸ்ட்), உண்மையறியும் சோதனை இரண்டிலுமே முரண்பாடுகள் இருப்பதை கேரள உயர் நீதிமன்றம் கண்டறிந்தது. குற்றப்பிரிவு அதிகாரிகள் சிலரும் காவல் துறை அதிகாரிகள் சிலரும் முக்கியமான ஆதாரத்தை அழித்ததாக சிபிஐ அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியது. எனினும் அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். உண்மையறியும் சோதனையை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சிபிஐ நீதிமன்றம் பாதிரியார் பூத்துருக்கயிலை விடுவித்தது.

விசாரணையின்போது 49 சாட்சிகளில் 8 பேர் பிறழ்சாட்சிகளாக மாறினார்கள். ஆயினும், அபயா கொல்லப்பட்ட அன்று அந்த கான்வென்ட்டுக்குச் சென்ற திருடன் ராஜு தனது சாட்சியத்தில் உறுதியாக இருந்தார். எத்தனையோ அழுத்தங்கள், பணபேரங்களுக்கு அடிபணியாமல் அவர் உண்மையின் பக்கம் நின்றது பாராட்டுக்குரியது. இந்த வழக்கு குற்றவியல் நீதியமைப்பின் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. முக்கியக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தாலும் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாகக் கருதிவிட முடியாது. பாதிரியார் பூத்துருக்கயில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ முறையீடு செய்திருக்கிறது. எதுவாகினும், அதிகாரம் படைத்தோர் குற்றச் செயலில் ஈடுபட்டு தன் அதிகாரத்தின் மூலம் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கைக்கு இந்த வழக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in