Published : 12 Oct 2015 07:58 AM
Last Updated : 12 Oct 2015 07:58 AM

கடற்கரையிலிருந்து அழைக்கும் காற்று!

கடற்கரையிலிருந்து சற்றுத்தள்ளி கடலிலேயே காற்றாலைகளை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

ஆனால், காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்துறையினர் ஆர்வம் காட்டவில்லை. அரசு அளிக்கும் ஊக்குவிப்புகள் போதுமானவையாகவும் தொடர்ச்சியாகவும் இல்லை என்றே அவர்கள் நினைக்கின்றனர். நிலத்தில் காற்றாலை அமைக்க நிலம் கிடைப்பதில்லை. நிலத்துக்காக அதிக விலை தர வேண்டியிருக்கிறது. கடலில் அமைப்பதில் பிரச்சினையே கிடையாது. தொடர்ச்சியாக எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டிருந்தாலும் அனைத்து மாநிலங்களும் இது தொடர்பான பொதுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், கடலில் உள்ள நிலப் பகுதியில் காற்றாலை அமைத்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதால், தொழில்முகவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். காற்றாலை மூலமான மின்சாரத் தயாரிப்புக்கு உற்பத்திச் செலவு அதிகரிக்கக்கூடும் என்பதாலும், அந்தத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுவதால், புதிய தொழில்நுட்பத்தைப் புதிய நிறுவனங்கள் பயன்படுத்தினால் தங்களுடைய லாபம் குறையும் என்பதாலும், தொழில் முனைவோர் தயங்குகின்றனர். ஆனால், இவ்விரண்டும் பெரிய பிரச்சினைகள் அல்ல. இத்தொழில் துறையினரும் அரசும் அமர்ந்து பேசினால் எளிதாகத் தீர்வு காணலாம்.

கடல் பரப்பில் நிறுவப்படும் காற்றாலையில் தயாராகும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.12 முதல் ரூ.17 வரையில் இருக்கக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர். ஆனால், இது ஐரோப்பிய நாடுகளின் சாதனங்கள், சம்பள அடிப்படையிலான உற்பத்திச் செலவு. இந்தியாவில் இது மேலும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அரசு ஆதரவளித்து, உற்பத்தியாகும் முழு மின்சாரத்தையும் கொள்முதல் செய்வோம் என்று உறுதியளித்தால் தவிர, தனியார் இதில் ஈடுபடத் தயக்கம் காட்டுவது தொடரும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது நல்ல உதாரணம். 2010-ல் ஒரு கிலோ வாட் மின்சாரத்துக்கான கொள்முதல் விலை ரூ.15.30 ஆக இருந்தது. இப்போது வெறும் 6 ரூபாயாகக் குறைந்துவிட்டது. கடல் காற்றாலைத்துறை வளர்ந்து, ஏராளமானோர் இதில் ஈடுபடத் தொடங்கும்வரை, தொடக்ககாலத் தொழில் முனைவோர்களை அரசு கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும். கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க 16 அரசு அமைப்புகளிடம் இப்போது ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. ‘கடற்கரைக்கு அப்பால் மின்சாரம் தயாரிக்கும் தேசிய ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்துவதாக அரசு உறுதியளித்திருக்கிறது. இந்த ஆணையத்தையே அனைத்து ஒப்புதல்களுக்குமான ஒற்றைச் சாளர அமைப்பாக அரசு அறிவித்துவிடலாம். அதற்கேற்ப அதன் அதிகாரங்களை அதிகப்படுத்தலாம்.

தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதியில் மட்டும் 2 கிகா வாட் (20 லட்சம் கிலோ வாட்) மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஸ்காட்லாந்து சர்வதேச வளர்ச்சி அமைப்பு’ என்ற நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது.

இந்த அளவு மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தாமல் இருந்தால், நம்மைவிடப் பரிதாபத்துக்குரியவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியா முழுவதும் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ. ஆகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; பிற மாநிலங்களிலும் கடல் காற்றாலைகளை நிறுவ நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தக் காற்றாற்றல் மின்னாற்றலாக மாற மத்திய அரசுதான் இனி முன்முயற்சி எடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x