Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

பேரிடர் பாதுகாப்பில் கால்நடைகள் பராமரிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்

நிவர், புரெவி புயல்களைக் குறித்த தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், மாவட்ட நிர்வாகங்களின் விரைவான செயல்பாடுகளாலும் பாதிப்புகளைக் குறைக்க முடிந்திருக்கிறது. நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 2,30,000 பேர் 2,099 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். புயல் பாதிப்பு கடுமையாக இருந்தால் சற்றேறக்குறைய 13 லட்சம் பேர் தங்கும் வகையில் 4,733 முகாம்கள் தயார்நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. புரெவி புயல் எதிர்பார்க்கப்பட்டபோது கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருந்தன.

நிவர் புயலாலும், அதையடுத்து புரெவி புயலாலும் பெய்த கனமழையாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் கே.பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பது பாராட்டுக்குரியது. புயலாலும் அதையடுத்துக் கனமழையாலும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் அடுத்தடுத்துச் சென்றதோடு மழையால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். கடலூரிலும் காவிரிப் படுகை மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், நிலக்கடலை, கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அழுகிவிட்டன. பல இடங்களில் முழங்கால் அளவு நீரில் நெற்பயிர்கள் மூழ்கி வீணாயின. புயலால் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட குடிசைகள், ஓட்டு வீடுகளுக்கும் உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். குறிப்பாக, உயிரிழந்த பசு மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம், எருதுகளுக்கு ரூ.25 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.16 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

புயல் மற்றும் கனமழை பாதிப்புகளின்போது வசிப்பிடங்களும் விளைபயிர்களுமே முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. வேளாண் தொழிலின் இணைபிரியாத அங்கமான கால்நடை வளர்ப்பு உரிய கவனத்தைப் பெறுவதில்லை. தாழ்வான குடியிருப்பவர்களின் வீடுகள் நீரால் சூழ்ந்திருக்கும்போது அவர்களைப் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைப்பதற்கு முனைப்புக் காட்டும் அரசு, அவர்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் மேடான பகுதிகளில் தற்காலிகக் கொட்டில்களை அமைப்பது குறித்தும் திட்டமிட வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான உலர் தீவனங்கள், வைக்கோல், குடிநீர், ஈரமற்ற தரை ஆகிய வசதிகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரின் வழிகாட்டுதலும் கொண்டதாக தற்காலிகக் கால்நடை முகாம்களை அமைக்க வேண்டும்.

புயல் காலங்களில் இத்தகைய முகாம்களை அமைக்க வேண்டும் என்று கிராம ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவை செயல்வடிவம் பெறுவதில்லை. நிவர் புயலால் 3,906 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் 30,500 கோழிகள் இறந்துள்ளதாகவும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எந்தவொரு பேரிடரின் பாதிப்பிலிருந்தும் விவசாயிகள் எளிதில் மீண்டுவருவதற்குக் கால்நடை வளர்ப்பு பேருதவியாக இருக்க முடியும். பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கால்நடைப் பராமரிப்பையும் உள்ளடக்குவது காலத்தின் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x