Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

வட்டார வழக்குப் பாகுபாடுக்கெதிரான சட்டம்: நல்வரவு பிரான்ஸ்!

உலகெங்கும் நிலவும் நிறம், மொழி, மதம், இனம்சார் பாகுபாடுகளின் நீட்சிகளில் ஒன்று வட்டாரம் சார் பாகுபாடு. வட்டார மொழி வழக்குகளைக் கீழாகக் கருதுவது இதன் ஒரு பகுதி. குரூரமான இந்த மேட்டிமைத்தனத்துக்குப் புதிய சட்டத்தின் வழி பலத்த அடி கொடுக்க முயன்றிருக்கிறது பிரான்ஸ். மிகுந்த வரவேற்புக்குரியது இது. பரப்பளவில் தமிழ்நாட்டைவிடப் பெரியது என்றாலும் மக்கள்தொகையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டைவிடச் சிறியது பிரான்ஸ். எனினும், அந்த நாடே ஒரு குட்டி உலகத்தைப் போன்றது. பல்வேறு நாட்டினர், மதத்தினர், மொழியினர், இனத்தினர் வாழும் நாடு அது. அந்நாட்டின் 6.71 கோடி மக்கள்தொகையில் 51% கிறித்தவர்கள் என்றால், மீதியுள்ளோர் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள். கூடவே, தங்கள் நாடுகளின் வறுமை, அரசியல் சூழல் போன்றவை காரணமாகத் தஞ்சம் புகுபவர்களை இரு கரமும் விரித்து வரவேற்றுக்கொள்ளும் நாடு பிரான்ஸ். பன்மைத்தன்மைக்குப் பேர்போன பிரான்ஸ் தன் சமூகத்திலுள்ள பாகுபாடுகளைக் களைய தொடர்ந்து முயல்கிறது. அதன் ஒரு பகுதியே சமீபத்திய சட்டம்.

பிரான்ஸ் சிறிய நாடு என்றாலும் அதற்குள் பல வட்டாரங்கள், அவற்றுக்கென்ற மொழி வழக்குகள் உள்ளன. கூடுதலாக, அங்கு தஞ்சம் தேடி வந்தவர்கள், குடியேறியவர்கள் தங்களுக்கே உரிய விதத்தில் பிரெஞ்சைப் பேசுவார்கள். குறிப்பாக, ஆப்பிரிக்கர்கள், அரேபியர்கள், ஈழத் தமிழர்கள் போன்றோர் பேசும் பிரெஞ்சு வேறுபட்ட விதத்தில் இருக்கும். இவர்கள் பேசும் பிரெஞ்சும், வட்டாரங்களில் பேசும் பிரெஞ்சும் தாழ்வானவையாகவே தலைநகர் பாரீஸைச் சேர்ந்த பிரெஞ்சு மொழி வழக்கைப் பேசுபவர்களால் பார்க்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகளிலும் வட்டார வழக்கினருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. சமீபத்தில், பிரான்ஸின் தீவிர இடதுசாரித் தலைவரான ழான்-லக் மெலான்க்கான் வட்டார வழக்கில் அவரைக் கேள்வி கேட்ட ஒரு பெண் பத்திரிகையாளரைக் கேலிசெய்தது அங்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புதிய சட்டமானது மொழி வழக்கின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டுக்குக் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகியிருப்பது கட்சிப் பாகுபாடின்றி பிரான்ஸ் சமூகம் தன்னை சுயபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்வதற்கான வெளிப்பாடு. இந்தியாவுக்கும் இதில் பாடம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x