Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

மதுரோவின் வெற்றி வெனிஸூலாவை மீட்டெடுக்குமா?

வெனிஸூலாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோவும் அவரது கூட்டணியும் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் எண்ணெய் வளம் கொண்ட அந்த நாட்டின் அதிகாரத்தின் மீது அதிபர் மதுரோவின் பிடி இறுகியிருக்கிறது. ஏற்கெனவே, மதுரோ 2018-ல்மறுமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்காததை அடுத்து நாடாளுமன்ற அவைத் தலைவர் ஹ்வான் கொய்தோ தன்னைத் தானே அதிபராக அறிவித்துக்கொண்டார். கிளர்ச்சி செய்வதற்கு கொய்தோ அழைப்பு விடுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவு அவருக்கு இருந்தும்கூட நீதித் துறை, ராணுவம் உள்ளிட்டவை மதுரோவுக்கு விசுவாசமாக இருந்தன.

பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் மதுரோவின் ‘ஒருங்கிணைந்த சோஷலிஸக் கட்சி’யும் அதன் கூட்டணிக் கட்சிகளுள் 67% வாக்குகளைப் பெற்று வலுவான வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் அந்த நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதுபோல் தெரியவில்லை. கொய்தா தலைமையிலான பிரதான வலதுசாரி எதிர்க்கட்சி இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. தேர்தல் முடிவுகளையும் எதிர்க்கட்சி புறக்கணித்திருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 31% மட்டுமே தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதையும், 2015-ல்எதிர்க்கட்சி வென்றபோது பதிவான வாக்குகளில் இது சரிபாதிக்கும் குறைவே என்பதையும் சுட்டிக்காட்டி இந்த ஒட்டுமொத்த நடைமுறையையும் எதிர்க்கட்சி கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளும் இந்தத் தேர்தலையும் தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

வெனிஸூலா நீண்ட காலமாக நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது. எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டபோது மதுரோவுக்கு முன்பு அந்த நாட்டின் அதிபராக இருந்த கவர்ச்சிகரமான தலைவரான ஹூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா பல தடைகளை விதித்ததாலும், அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் உணவு, எரிபொருள், மருந்து போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. போராட்டங்களும் வெடித்தன. இதனால், 45 லட்சம் பேர் அந்த நாட்டை விட்டுத் தப்பியோடினார்கள்.

2015-ல் நடந்த தேர்தலானது ஆளும் சோஷலிஸ்ட்டுகளுக்கு ஒரு ஆரம்பக் கட்ட எச்சரிக்கையாக இருந்தது. அப்படியும் பொருளாதாரத்தைச் சீரமைக்க அவர்கள் தவறிவிட்டனர். எதிர்க்கட்சியும் மக்களைத் திரட்டி பெரிய இயக்கத்தை உருவாக்கத் தவறிவிட்டது. அரசியல்ரீதியாகப் போராடுவதை விடுத்து அமெரிக்கா, கொலம்பியா போன்ற வெளிநாட்டு சக்திகளுடன் கைகோத்துக்கொண்டு கொய்தா அதிகாரபூர்வமற்ற வகையில் தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டது எதிர்க்கட்சியினர் ஏகாதிபத்தியர்களின் கைக்கூலிகள் என்று மதுரோ மேற்கொண்ட பிரச்சாரத்தை உறுதிப்படுத்துவதுபோலவே இருந்தது. தேர்தலைத் தவிர்த்ததன் மூலம் அதில் மதுரோ எளிதில் வெற்றிபெறவே எதிர்க்கட்சிகள் வழிவகுத்தார்கள். அரசை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்த் தரப்பு ஒரு வலுவான அரசியல் இயக்கத்தைக் கட்டமைத்து மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமே தவிர, அந்நிய நாடுகளின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அது ஆடக் கூடாது. அது எந்த வகையிலும் வெனிஸூலாவுக்கு உதவாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x