Published : 10 Dec 2020 03:15 am

Updated : 10 Dec 2020 07:27 am

 

Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 07:27 AM

மதச்சார்பின்மையே இந்தியாவின் வலிமை

secularism

ஐநா பொது அவையில் ‘அமைதிப் பண்பாடு’ குறித்த ஐநா நாகரிகங்களுக்கான கூட்டணியின் (யுஎன்ஏஓசி) தீர்மானங்களை விவாதிக்கையில், மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் ஆகிய ஆப்ரகாமிய மதங்களை மட்டுமே காப்பாற்ற முனையும் பாரபட்சப் போக்கை ஐநா கடைப்பிடிப்பதாக இந்தியா விமர்சித்துள்ளது. 2006-ல் யுஎன்ஏஓசி நிறைவேற்றிய தீர்மானம் இஸ்லாமிய, கிறிஸ்தவ, செமிட்டிக் மதங்களுக்கு எதிரான வெறுப்பையே மீண்டும் மீண்டும் கண்டித்தது; மாறாக, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட இதர சமயத்தவர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்று இந்தியப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான கர்தார்பூர் குருத்வாரா பாதைக்கான உடன்பாட்டை ஐநா பொது அவை வரவேற்றது; ஆனால், உடன்பாட்டை மீறியும், சீக்கிய மத நம்பிக்கைகளுக்கு மாறாகவும் சீக்கிய ஆலயத்தின் நிர்வாகத்தை பாகிஸ்தான் அரசு கையில் எடுத்துக்கொண்டதைக் கவனிக்கத் தவறிவிட்டது என்று இந்தியா கூறியுள்ளது. இந்திய சமய நம்பிக்கைகளுக்கு எதிராக வெறுப்புக் கலாச்சாரத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுப்பதாக பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டிய இந்தியப் பிரதிநிதி, இந்நிலை மாறாத வரை அமைதிக்கான பண்பாடு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். அனைத்துக்கும் மேலாக, 2005-ல் தொடங்கப்பட்ட யுஎன்ஏஓசி அமைப்பின் வாயிலாக ஐநா கடைப்பிடிக்கும் பாரபட்சப் போக்கானது சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களையாமல், அவற்றுக்கு இடையிலான மோதல்கள் தவிர்க்கவியலாதது என்ற கருத்தை வளர்த்தெடுக்கவே உதவுகிறது.


மூன்று மதங்கள் மட்டுமே மத வெறுப்புக்கு ஆளாவதாகச் சித்தரிக்கும் ஐநாவின் தீர்மானத்தை முழுதாக ஏற்றுக்கொள்ளும் இந்தியா, பாதிக்கப்படுபவர்கள் பற்றிய வரையறையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், மத அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமூகமும் அதற்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஐநா பாதுகாப்பு அவையில் இரண்டாண்டு காலம் இந்தியா உறுப்பினராகப் பதவிவகிக்கவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான சர்ச்சைகளை உருவாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளும்கூடத் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா அமைப்புகள் இந்தியாவைக் கண்டிக்கும் போக்கு அதிகரித்துவருவது இந்தியா தன்னைத் தானே மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை விமர்சித்த ஐநா மனித உரிமைக் குழுவைப் போலவே யுஎன்ஏஓசி உள்ளிட்ட மற்ற ஐநா அமைப்புகளையும் இந்தியா சமாளித்துவிடும் என்பது உறுதி. மதரீதியான ஐநாவின் பாரபட்சத்தை வெளிப்படுத்தும் அதே நேரத்தில், அதே குற்றச்சாட்டுக்குத் தானும் ஆளாகிவிடக் கூடாது என்பதிலும் இந்தியா கவனமாக இருந்தாக வேண்டும்.

வெவ்வெறு சமய நம்பிக்கைகள் கொண்டவர்களிடையான திருமணங்களைச் சிக்கலாக்கும் சட்டங்களைச் சில மாநிலங்கள் கொண்டுவருகின்றன. இந்நிலையில், மாறுபட்ட நம்பிக்கைகள் கொண்டவர்களை ஒரே கூட்டணியில் இணைக்க விரும்பும் அமைதிப் பண்பாட்டுக்காக இந்தியாவால் ஒருபோதும் குரல்கொடுக்க முடியாது. மதரீதியில் பாரபட்சம் காட்டும் ஐநாவின் தீர்மானங்கள், நியாயமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றோடு பாகிஸ்தான் போன்ற சர்வதேச முயற்சிகளையும் எதிர்த்து வாதிடுவதற்கான இந்தியாவின் சக்தி என்பது எப்போதும் அதன் அரசமைப்புச் சட்டத்தில் அடங்கியுள்ள மதச்சார்பின்மையின் அடிப்படைகள், பன்மைத்துவத்தின் கூறுகளிலிருந்தே வலிமையைப் பெற முடியும்.


மதச்சார்பின்மைமதச்சார்பின்மையே இந்தியாவின் வலிமைSecularismஅமைதிப் பண்பாடுஐநா பொது அவை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x