

துனீசிய நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இடையே சமரசப் பேச்சுகளை நடத்தி, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட 4 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015-ம் ஆண்டுக்கான சமாதான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. துனீசிய பொதுத் தொழிற்சங்கம், துனீசிய தொழில்துறைக் கூட்டமைப்பு, துனீசிய மனித உரிமைகள் லீக், துனீசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே இந்த ஆண்டின் நோபல் சமாதானத் தூதர்கள்!
துனீசியாவில்தான் 2011-ல் முதன்முதலாக ஆட்சியாளருக்கு எதிராக மக்களுடைய கிளர்ச்சி மூண்டது. அதை ‘மல்லிகைப் புரட்சி’ என்று வர்ணித்தார்கள். அது பிற நாடுகளில் ஏற்படுத்திய தொடர்ச்சியான கிளர்ச்சியைத்தான் ‘அரபு வசந்தம்’ என்றனர். எனினும், ‘அரபு வசந்தம்’ ஏனைய நாடுகளில் பெரும் புயலை உருவாக்கியிருக்கும் சூழலில், துனீசியா ஜனநாயகத்தை நோக்கி நடைபோட இந்த 4 அமைப்புகளும் முக்கியமான காரணம். 2013-ல் இந்த 4 அமைப்புகளும் நாட்டில் அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படத் தொடங்கின. மிகவும் சிக்கலான அரசியல் பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். அரசியல் சட்ட அடிப்படையில் கருத்தொற்றுமைக்குப் பாடுபட்டனர். பாலின பேதம், அரசியல் பாரபட்சம், மத நம்பிக்கைகளில் வேறுபாடற்ற பன்முக ஜனநாயக அரசுக்கு நாடு மாறுவதற்கு உதவினர்.
ஒரு நாடு ஜனநாயக வழிமுறைகளை முற்றாக ஏற்றுக்கொள்வது எளிதல்ல; அதற்கு நீண்ட காலமும் பிடிக்கும். இது இந்திய அனுபவம். ஜனநாயகம் ஒரு நாட்டில் வெற்றிபெற வேண்டும் என்றால், மக்கள் அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும்; அரசியல் அமைப்புகள் சட்டப்படியாகச் செயல்பட வேண்டும். உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அப்பால் இருப்பவை என்ன என்று முடிவு செய்யக் கூடிய அசாதாரணமான தனி நபர்கள் அந்த நாட்டில் இருக்க வேண்டும். 1946-ல் நிறுவப்பட்ட துனீசிய பொதுத் தொழிற்சங்கத்துக்கு இதில் நல்ல பாரம்பரியம் இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 5% அதன் உறுப்பினர்கள் என்பது அதன் செல்வாக்கைச் சொல்லக் கூடியது.
தொழிலாளர்களின் நலனுக்காகப் பேரம் பேசும் அதன் ஆற்றல், துனீசியா எங்கும் பரந்துவிரிந்து கிளை அமைப்புகளைக் கொண்டிருக்கும் அதன் நிர்வாக அமைப்பு, பேச்சுவார்த்தை நடத்துவதில் அதன் தலைவர்களுக்கு இருக்கும் நெடிய அனுபவம் போன்றவற்றால் 2013-ல் எல்லா அரசியல் கட்சிகளையும் புதிய திசைவழிக்குச் சம்மதிக்கவைக்க முடிந்தது. இதனாலேயே முற்போக்கான அரசியல் சட்டம் 2014 ஜனவரியில் உருவானது. அதையடுத்து 2014-ல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கும் வழிவகுத்தது. பிற அமைப்புகளும் பொதுத் தொழிற்சங்கத்துக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து சமரசப் பேச்சுவார்த்தையில் தலைமை ஏற்க வைத்தன. பிற அமைப்புகளும் இத்தொழிற்சங்கத்தைப் போலவே நீண்ட காலமாக உள்நாட்டில் இயங்கிவருபவை.
எனவே, தேச நலன் கருதி இணைந்து செயல்படுவதில் அவற்றுக்கிடையே பிரச்சினை ஏற்படவில்லை. நல்ல மக்கள் அமைப்புகளும் வலுவான தொழிற்சங்கமும் இருந்தால் அங்கே ஜனநாயக நடைமுறைகள் வேர்விட்டு வலுப்பெறுவது எளிது என்று இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிய முடிகிறது. அந்த வகையில், இந்த நோபல் விருது ஒரு முன்னுதாரணத்தை உலகுக்குச் சுட்டிக்காட்டுகிறது!