Published : 30 Nov 2020 03:10 am

Updated : 30 Nov 2020 08:10 am

 

Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 08:10 AM

நிவர் சொல்லிச்சென்றிருக்கும்செய்தி என்ன?

nivar-cyclone

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அச்சத்தை உண்டாக்கிய ‘நிவர் புயல்’ கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகக் குறைவான சேதங்களோடு முடித்துக்கொண்டு நவ.26 அன்று புதுச்சேரியைக் கடந்தது பெரிய ஆறுதல். 2018 ‘கஜா புயல்’, 2015 வெள்ளம் ஆகிய இரண்டும் இணைந்த இரட்டைத் தாக்குதலாக இது அமைந்துவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கும் அரசுக்கும் இருந்தது. கரோனா பெருந்தொற்றுச் சூழல் வேறு இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்கி இருந்தது.

விளைவாக, அரசும் மக்களும் இந்தப் புயலை எதிர்கொள்ளத் தங்களால் ஆன அளவுக்கு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளோடு தயாராக இருந்தார்கள். சீரான இடைவெளியில் வானிலை சார்ந்த அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் தரப்பட்டுக்கொண்டிருந்ததும், தயார் நிலையில் இருந்த பேரிடர் மேலாண்மைக் குழுக்களும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இருந்தன. முதல்வர் பழனிச்சாமி நேரடியாக நீர்நிலைகளுக்கே சென்று கள ஆய்வுகள் செய்தார்.


அதற்கு இணையாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் களத்தில் மக்கள் மத்தியில் சென்றார். மாநிலம் முழுக்க இரு கட்சியினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது மிகுந்த பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், விஷயம் இதோடு முடியவில்லை. நான்கு பேர் உயிரிழப்பு, பொருட்சேதம், பயிர்ச் சேதம் என்று இந்தப் புயல் முந்தைய அனுபவங்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான சேதங்களை உண்டாக்கியதோடு கரையைக் கடந்ததால் மாநிலம் அடுத்த நாளே மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது. ஒருவேளை முன்னதாகக் கணிக்கப்பட்ட அளவுக்குப் புயலின் வீச்சு அதிகமாக இருந்து, மழையும் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

தலைநகரம் சென்னையின் புறநகர்கள் இந்தப் புயல் மழைக்கே வெள்ளக்காடாக மாறியதும், கிட்டத்தட்ட மூன்று நாட்கள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் அலைக்கழிந்ததும் 2015 காட்சிகளை மீண்டும் கண் முன்னே கொண்டுவந்தன. பருவநிலை மாறுபாடு உலகளாவிய பிரச்சினை ஆகிவரும் நிலையில், சூழலுக்கு இயைந்த பார்வையை நோக்கி நம்முடைய அரசும் சமூகமும் பயணப்படுதல் முக்கியம்.

முந்தைய பாதிப்புகளின்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் தொடங்கி, பெரும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையிலான பெரும் வடிகால்களை அமைத்தல் வரை எவ்வளவோ விஷயங்கள் பேசப்பட்டன. பகாசுரத் திட்டங்களுக்கு எதிரான பார்வை வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால், எதுவுமே நடக்கவில்லை. மீட்புப் பணி, நிவாரணப் பணிகளைவிடவும் முக்கியமானது தொலைநோக்குடன் எதிர்கொள்ளும் பணி. தமிழகம் இந்தப் பார்வையைப் பெற வேண்டும் என்பதையே சொல்லிச்சென்றிருக்கிறது நிவர்.


நிவர்நிவர் புயல்NivarNivar cycloneதமிழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x