

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரூ.66,000 கோடியை லாப ஈவாக (டிவிடெண்ட்) மத்திய அரசுக்கு அளித்து வரலாறு படைத்திருக்கிறது. இதன் காரணமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் அரசின் செலவைவிட வருவாய் அதிகரித்ததாலும் உபரி ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் வரி வசூலிப்பு முனைப்பாக இருந்ததால் வருவாய் அதிகரித்தது. அரசின் செலவுகள் - குறிப்பாக மானியச் செலவுகள் - கணிசமாகக் குறைந்தன. கடந்த 5 மாதங்களாக மத்திய அரசின் செலவு ரூ.3.7 லட்சம் கோடி என்ற இலக்குக்கும் குறைவாகப் பராமரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தப் பற்றாக்குறை ரூ.3.97 லட்சம் கோடியாக இருந்தது. பற்றாக்குறையைக் குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்துவதால் பேரியல் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை ஏற்படுகிறது.
அரசின் செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதான செயல் அல்ல. அதே வேளையில், அரசு செலவு செய்யாவிட்டாலும், வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டாலும் பொருளாதாரரீதியாக மட்டுமல்ல, அரசியல்ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தாராளமாகச் செலவழிக்க வேண்டும். அதே சமயம், செலவைக் கட்டுக்குள்ளும் வைத்துக்கொள்ள வேண்டும்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறையைப் பராமரிக்க வேண்டிய இலக்கை 3.6% என்பதிலிருந்து 3.9% ஆக உயர்த்தியது. இதனால் கூடுதலாக ரூ.70,000 கோடியைச் செலவிட முடிந்தது. இந்த ரூ. 70,000 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளில் முதலீடாகச் செலவிடப்பட்டது. நிதிப் பற்றாக்குறை இலக்கை இதற்கு முன்புகூட அரசுகள் தாங்களாகவே உயர்த்திக்கொண்ட முன்மாதிரிகள் பல உண்டு. அரசின் வரவைவிடச் செலவு அதிகமாவது நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம் அல்ல என்பதால், ‘பொது நிதி பொறுப்புணர்வு - நிதிநிலை நிர்வாக மசோதா’(எஃப்.ஆர்.பி.எம்.) என்பதை 2000-ல் இயற்றினார்கள். அதில் நிதிப் பற்றாக்குறை அதிகபட்சம் எந்த அளவு வரை இருக்கலாம் என்று இலக்கு நிர்ணயித்தார்கள். இது ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்பதுதான் இலக்கு. இதைக் கடைப்பிடிப்பது தொடர்ந்து இயலாமல் போகவே, 2003-ல் இப்படி நிரந்தர இலக்கு தேவையில்லை என்று திருத்த மசோதா கொண்டுவந்தார்கள். அதன் பிறகு ஆண்டுதோறும் மத்திய அரசே இந்த இலக்கைப் பரிசீலித்து மாற்றிக்கொள்ளும். இந்நிலையில்தான், இந்த ஆண்டு அரசுக்கு வருவாய் குறைந்தாலும் இந்த இலக்கு மாற்றப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சகச் செயலர் அறிவித்தது வரவேற்பு பெற்றது. இப்போது பணவீக்க விகிதம் 4% என்ற அளவுக்குக் கீழேயே இருக்கிறது. பேரியல் பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டால்தான் தொடர் வளர்ச்சி சாத்தியம். அத்துடன் வளர்ச்சிக்கான முழு சாத்தியக்கூறு அளவு என்னவோ அதையே நிஜத்திலும் அடைய இயலும்.
தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் வெவ்வேறு சலுகை களை நீக்கிவிட்டு, அவற்றின் மீதான நேரடி வரியை (கார்ப்பரேட் வரி) மேலும் குறைத்து, வரித் தொகையைத் திட்டவட்டமாக உறுதி செய்துகொள்ள நிதியமைச்சகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அது சீர்திருத்தமாக அமையக்கூடும்!