Published : 27 Nov 2020 06:43 AM
Last Updated : 27 Nov 2020 06:43 AM

லட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும் சவால்கள்!

கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கி எதிர்கொள்ளும் நெருக்கடிகளும், அதைச் சரிசெய்வதற்கான முன்னெடுப்புகளும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கின்றன. அந்த வங்கிக்கு ஒரு மாதம் வர்த்தகத் தடையை ரிசர்வ் வங்கி விதித்திருக்கிறது; கூடவே சிங்கப்பூர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டிபிஎஸ் வங்கியானது லட்சுமி விலாஸ் வங்கியைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான வரைவுத் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருக்கிறது. இவை நல்ல நகர்வுகளாக வங்கித் துறையில் பார்க்கப்படுகின்றன. இந்த நகர்வுகள் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் போன்றோரின் நிதி நலன்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

வங்கிகள் இணைப்பு நடைபெறும்போது பங்குதாரர்களின் பங்குகள் மதிப்பு நீக்கப்படும். இப்படித்தான் எட்டு மாதங்களுக்கு முன்பு யெஸ் வங்கி தடுமாறியது, அதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னெடுப்பில் நிதியூட்டம் செய்யப்பட்டு அது காப்பாற்றப்பட்டது. இப்போது, கரூரைத் தலைமையிடமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி காப்பாற்றப்படுகிறது. ஒழுங்காற்றுநர் தலையிட்டு நிதியூட்டம் செய்து வங்கியை மூழ்காமல் காக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாலும், வாராக்கடனுக்கு நிகராக, அதன் சொத்துகளின் நிகர மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்ததாலும், தனது வரவு-செலவுக் கணக்கை சமன்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளை அதனால் ஈட்ட முடியாததாலும் ஒழுங்காற்றுநரின் தலையீடு அவசியமானது. ரிசர்வ் வங்கியின் ‘உடனடி சீரமைப்பு நடவடிக்கை சட்டக’த்தின் கீழ் லட்சுமி விலாஸ் வங்கி செப்டம்பர் 2019-லேயே கொண்டுவரப்பட்டாலும் மார்ச் 2020-ல் அதன் செயல்படாத சொத்துகளின் மதிப்பு மிகவும் குறைந்தது.

தடுமாறும் வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வங்கிகளின் நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கிறது. கரோனா பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் பரவலான பாதிப்பையும், பெருநிறுவனங்கள், அரசு இரண்டு தரப்பின் பற்றுவரவுக் கணக்குகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளியரான கீதா கோபிநாத் சமீபத்தில் பேசியிருக்கிறார். ரிசர்வ் வங்கி மார்ச்சிலிருந்து பொருளாதாரத்துக்கு நிதியூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் தற்போது வணிக வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், அடகு நிறுவனங்கள் போன்றவற்றை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளால் தற்போதைய நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.9%-ஆகச் சுருங்குமானால் மார்ச் 2021-க்குள் செயல்படாத சொத்துகளின் மதிப்பு 14.7%-ஆகப் பலவீனமடையும் என்று ரிசர்வ் வங்கியின் ‘நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை’ கணித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.5%-ஆகச் சுருங்கும் என்று ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபரிலேயே கணித்திருந்தது; மேலும், குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அதனால் பொருளாதாரத் துறையும் பெரிதும் பாதிப்படையும் என்றும் கணித்திருந்தது. ஆகவே, பொருளாதாரம் புத்துயிர் பெறத் தள்ளாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதைக் குறைந்தபட்ச வேகத்திலாவது தொடர்ந்து இயக்க வேண்டிய கடுமையான சவால் ரிசர்வ் வங்கியின்
முன்னால் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x