

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டைநிறுத்த அத்துமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. சாதாரண குடிமக்கள் 6 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் என்று 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய குண்டுவீச்சால் பாகிஸ்தான் தரப்பில் ஒரு ராணுவ வீரர், ஐந்து குடிமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் பனியானது கணவாய்களையும் சுரங்கப் பாதைகளையும் மூடுவதற்கு முன் இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் விதத்தில் திசைதிருப்பலாக இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியிருப்பதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. இரண்டு பக்க உயர் தரப்புகளும் பரிமாறிக்கொண்ட அரசியல்ரீதியான வார்த்தைகள் காரணமாக இன்னும் பதற்றம் அதிகரித்தது.
தீபாவளியின்போது லாங்கேவாலா நிலைக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமலேயே அந்நாட்டுக்குக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று எச்சரித்தார். சீனாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே அதன் ‘ஆக்கிரமிப்பு மனப்போக்’கை விமர்சித்தார். இதற்குச் சில மணி நேரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அடுத்ததாக, ராஜதந்திர உத்தியாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூது குரேஷியும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். சீனா-பாகிஸ்தான் பொருளாதார இடைகழியில் உள்ள அடிப்படைக் கட்டுமானங்களைக் குறிவைத்து இந்தியா பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூறினார்கள். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை இந்தியாவுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கை என்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி இந்தியா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்றும் இந்தியா தெரிவித்திருக்கிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் பதற்றம் தற்போதைக்குத் தணிவதாகத் தெரியவில்லை. ஆகவே, அதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். 2003-ல் இந்தியா – பாகிஸ்தான் சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதிலிருந்து 2020-ல்தான் பாகிஸ்தான் அதிக அளவில் அத்துமீறல் நிகழ்த்தியிருக்கிறது என்றும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 4,052 முறை அத்துமீறல் நடந்திருக்கிறது என்றும் இந்திய ராணுவத் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஜனவரியிலிருந்து ஐநாவின் பாதுகாப்பு அவையில் இந்தியாவின் இரண்டாண்டு காலப் பிரதிநிதித்துவம் தொடங்கவிருக்கிறது; பொருளாதார நடவடிக்கைப் பணிக் குழுவின் (எஃப்.ஏ.டி.எஃப்.) மீளாய்வு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியாவை அச்சுறுத்துவதற்காக பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். மேலும், 1962-க்குப் பிறகு இந்தியா-சீனா உறவு மிகவும் மோசமடைந்திருக்கும் சூழலில் ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார இடைகழி’ பற்றிப் பேசினால் அந்த உறவு மேலும் மோசமாகும் என்றும் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. ‘எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி’, ‘நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி’ ஆகிய இரண்டு முனைகளிலும் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சூழலில் இந்தியா தனது எல்லைகளில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.