

மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதிலும், அப்படி நடந்தால் உடனே கண்டுபிடிப்பதிலும் வங்கிகள் திறமையில்லாமல் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருதுவது நியாயமே. வங்கிகளில் நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கையும் அதில் புழங்கும் பணத்தின் அளவும் சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ‘பேங்க் ஆஃப் பரோடா’வங்கியின் ஒரு கிளை மட்டும் சம்பந்தப்பட்ட சமீபத்திய அந்நியச் செலாவணி மோசடியின் மதிப்பு ரூ.3,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கித் துறையை இப்போது பெரிதும் பாதித்துவரும் இரு அம்சங்கள் 1. வாராக் கடன்களின் அளவு அதிகரிப்பது. 2. மோசடி. கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளில் நடந்த மோசடிகளில் தொடர்புள்ள மொத்தத் தொகையின் அளவு மட்டும் ரூ.28,000 கோடி. மோசடிகள் எவ்வளவு என்று தெரியாது. ஆனால், வெளிவந்த சம்பவங்களில் தொடர்புள்ள தொகை மட்டும் இது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வங்கித் துறையில் மோசடிகள் அதிகமாகிவிட்டன என்று டெலாயிட் நிறுவனம் நடத்திய வங்கித் துறை மோசடி தொடர்புள்ள சர்வே தெரிவிக்கிறது. அந்த சர்வே பேட்டி கண்டவர்களில் 93% பேர் சொல்லிவைத்தார்போல மோசடி அதிகரிப்புபற்றி கவலை தெரிவித்துள்ளனர்.
மிக அதிகத் தொகை பற்றிய மோசடிகளை மட்டுமே விரைந்து விசாரிக்கின்றனர் என்றும் மற்றவற்றை விசாரிக்கும் வேகம் போதவில்லை என்றும் வங்கித் துறை வட்டாரங்களே ஒப்புக்கொள்கின்றன. இத்தகைய மோசடிகள் நடந்தால் தீர விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டபூர்வமாகத் தண்டித்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறுவதை வங்கித் துறை அக்கறையுடன் கேட்டு நடக்க வேண்டும்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் சிறைத் தண்டனை அடைவதுடன், ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் வேண்டும். வங்கிகளில் ஏதேனும் முறைகேடு நடந்து அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை மூடி மறைக்கவே சம்பந்தப்பட்ட வங்கியின் மூத்த நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் தங்களுடைய வங்கிக்குக் கெட்ட பெயர் என்று நினைக்கின்றனர். இதுவே மோசடிக்கு உடந்தையாக இருக்கும் வங்கி ஊழியர்களுக்கு ஊக்குவிப்பாகப் போய்விடுகிறது.
மோசடி நடந்ததாகக் கண்டறியப்பட்ட சம்பவங்களில் 45% வங்கியின் உள் விசாரணையோடு முடிந்துவிடுகிறது. 32% சம்பவங்களில் மட்டுமே காவல் துறை போன்ற வெளியார் அமைப்புகளுக்குத் தகவல் தரப்படுகிறது. 14% சம்பவங்களில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களை, பதவி விலகுமாறு கோரி அத்துடன் அதை முடித்துக்கொள்கின்றனர். மிகச் சில வழக்குகளில் மட்டுமே தவறிழைக்கும் ஊழியர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படுகிறார்.
வங்கிகளில் நடைபெறும் மோசடிகளை முன்கூட்டியே அறியவும், தடுக்கவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாக நடைமுறையை உருவாக்கியிருக்கிறது. ஆனால், பல வங்கிகள் இன்னமும் பழங்கால முறையிலேயே அக தணிக்கை முறை, தங்களுடைய கிளை ஊழியர்கள் தரும் தகவல் ஆகியவற்றையே நம்பியிருக்கின்றன. வங்கிகளுக்குள் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கப் புதிய தணிக்கை முறைக்கு எல்லா வங்கிகளும் மாற வேண்டும். மோசடி நடந்தால் உடனே அதை விசாரித்து சம்பந்தப்பட்ட கணக்கை முடக்குவதுடன் அதற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!