Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

இயல்புநிலைக்குத் திரும்புகிறதா இந்தியப் பொருளாதாரம்?

அக்டோபர் மாதத்தில் ‘சரக்கு மற்றும் சேவை வரி’யிலிருந்து (ஜிஎஸ்டி) ரூ.1.05 லட்சம் கோடி வரையில் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இது பிப்ரவரி 2020-க்குப் பிறகு மறைமுக வரி வகைகளில் கிடைத்திருக்கும் அதிகபட்ச மாதாந்திர வருவாயாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் 4% வருவாய் அதிகரித்திருந்தது, அக்டோபரில் இது 10.25% ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து அடுத்து வந்த ஆறு மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் மிகவும் குறைந்துபோன நிலையில், கடந்த இரண்டு மாத நிலவரங்கள் பொருளாதாரம் மீட்சியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதற்கான அறிகுறிகளாக அமைந்துள்ளன.

அக்டோபர் ஜிஎஸ்டி வருவாயானது, பெரும்பாலும் செப்டம்பர் மாதப் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையதே. செப்டம்பரில், உற்பத்தித் துறையின் வாணிப நடவடிக்கைகளைக் குறித்த ‘பிஎம்ஐ’ குறியீடு, ஏற்றுமதிக் குறியீடு உள்ளிட்ட பெரும் தொகையிலான குறியீடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு, முந்தைய மாதத்தைக் காட்டிலும் பணவீக்கத்தில் ஏற்பட்ட வழக்கமல்லாத மாற்றத்தின் விளைவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் பொதுப் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சில தொழில் துறைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார நிலை சற்றே மேம்பட்டுள்ளது உண்மையே. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையை, இந்த நம்பிக்கைக்கான குறியீடுகளைக் கொண்டு ஈடுகட்டிவிடவும் முடியாது. அக்டோபர் மாதத்தின் பொருளாதார நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, நவம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயும் நேர்மறையானதாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள், அக்டோபரில் நல்ல விற்பனையைச் சந்தித்துள்ளன. ஜிஎஸ்டி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கான இழப்பீட்டை உடனடியாகப் பகிர்ந்தளிக்க வேண்டும். அதுவே, கூட்டாட்சியின் நற்செய்தியாக இருக்கும்.

எனினும், பொருளாதாரம் முற்றிலுமாக இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களின் தரவுகளைத் தீவிரமாக ஆய்வுசெய்துள்ள பொருளியலாளர்கள், அந்நிலை தொடர்ந்து நீடிக்கக்கூடியது என்றே தெரிவிக்கின்றனர். எனினும் அதன் ஒரு பகுதி, கடந்த சில மாதங்களாக நீடித்துவந்த ஊரடங்கின் காரணமாக அதிகரித்துள்ள தேவையைக் குறிக்கிறது என்றும் மற்றொரு பகுதி பண்டிகைக் காலத்தின் விளைவு என்றும் கணிக்கின்றனர். ஜூன் மாதத்தில் பொருளாதாரம் மிகவும் மோசமான சூழலில் இருப்பதாகக் கூறிய இந்தப் பொருளியலாளர்கள், இப்போது பொருளாதாரக் குறியீடுகள் மேம்பட்டுவரும் நிலையில், மந்த நிலைகளையடுத்து இப்படி தேவைகள் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான் என்று கூறுவதை நிதியமைச்சக அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொருளாதாரத்தைப் பற்றி நம்பிக்கையூட்டுவது சில சமயங்களில் அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதன் உண்மை நிலவரங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகளும் தேவையான ஒன்றே. அப்போதுதான் சிறப்பான கொள்கைமுடிவுகளை வகுக்க முடியும். வேலைவாய்ப்பு, அப்படிக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கியமான அளவீடு. ஆகவே, பொருளாதாரத்தில் மிகவும் சவாலாக உள்ளதும் தொடர்ந்து அரசால் ஆதரிக்கப்பட வேண்டியிருப்பதும் வேலைவாய்ப்புத் துறையே ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x