

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய இழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் தினசரி புதிதாகக் கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கைக்குக் குறைந்திருப்பது அரசு எடுத்துவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. மக்கள் நெரிசல் அதிகமுள்ள சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்தான் தினசரி தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நோய்ப் பரவலுக்கு மக்கள் நெரிசல் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் திறக்கவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.
பள்ளி மறுதிறப்பு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஜனவரி வரையிலும் தள்ளிப்போடும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரபூர்வமாக அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. அத்தகவல்கள் மறுக்கப்படவும் இல்லை. பள்ளிக் கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களிலும் தெளிவான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக நவம்.9 அன்று ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பெற்றோர்களை அழைத்துப் பேசி அவர்களின் கருத்தையறிந்து முடிவெடுக்கப்போவதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிவருகிறது.
உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, நோய்த்தொற்றின் இரண்டாவது அலை குறித்து அச்சமும் பதற்றமும் நிலவிவரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது விவேகமானது அல்ல. இது பருவமழைக் காலம். இயல்பாகவே டெங்கு போன்ற உயிராபத்தையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் காய்ச்சல் வகைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் காலம். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் சிரமங்களோடு போராட வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது கரோனா தொற்றுக்கான வாய்ப்பையும் அதன் பாதிப்புகளையும் மேலும் அதிகப்படுத்திவிடக் கூடும். கூடவே, போக்குவரத்து நெரிசலையும் மக்கள் நெரிசலையும் ஒருசேர உருவாக்கும். ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களிலேயே 200 ஆசிரியர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது நமக்கு ஓர் எச்சரிக்கையும்கூட.
இந்நிலையில், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைக்கும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வது முக்கியம். பள்ளிக் குழந்தைகள் ஜனவரி மாதம் வரையிலாவது வீட்டிலிருந்து பாடங்களைப் படிக்கட்டும். ஊரடங்கால் ஏற்கெனவே பொருளாதாரரீதியில் கடும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள் திறப்பால் நோய்ப் பரவலின் இரண்டாம் அலை எழுந்தால், இன்னொரு முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்; அது மிக மோசமான சூழலுக்கு மாநிலத்தை இட்டுச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யட்டும்.