Published : 27 Oct 2020 07:09 AM
Last Updated : 27 Oct 2020 07:09 AM

அண்ணா பல்கலை, உயர் சிறப்புத் தகுதி: இரண்டும் வேண்டும்

நுழைவுத் தேர்வுகள் அறிமுகம், கல்விக் கட்டணங்கள் உயர்வு, இடஒதுக்கீடு குறைப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைக் காரணம் காட்டி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்புத் தகுதி தேவையில்லை என்று தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். வரவேற்புக்குரிய அறிவிப்பு இது. சில மாதங்களாக தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த விவாதங்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனம் ஒன்றுக்குக் கிடைக்கக்கூடிய புதிய வாய்ப்புகளைக் கவனத்தோடு அணுக வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்த விஷயத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழக அரசும் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவை எடுத்திருந்தால், இரு தரப்புகளும் வெவ்வேறு கோணங்களில் செயல்படும் அவலம் நேர்ந்திருக்காது. துணைவேந்தர் மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆண்டுக்கு ரூ.314 கோடி வீதம் ஐந்தாண்டுகளுக்கு ரூ.1,570 கோடியைப் பல்கலைக்கழகத்தின் உள் ஆதாரங்களிலிருந்து திரட்ட முடியும்’ என்று குறிப்பிட்டதானது நிச்சயம் கல்விக் கட்டண உயர்வுக்கே வழிவகுக்கும். அமைச்சரின் அறிவிப்பு இதிலிருந்து முற்றிலுமாக முரண்படுவதை நாம் கவனிக்க வேண்டும். கல்விக் கட்டணங்களை உயர்த்தி அதன் வழியாக பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்புத் தகுதியைப் பெறுவது என்பது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பொறியியல் கனவுகளுக்குத் தடையாகிவிடக்கூடும். மேலும், நுழைவுத் தேர்வுகளைப் புகுத்துவதன் மூலமாக ஏற்கெனவே இங்கு நடைமுறையிலிருந்துவரும் சேர்க்கை விதிமுறைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகி, இடஒதுக்கீட்டு வாய்ப்புகளும் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் மிக நியாயமானது. மருத்துவ மேற்படிப்புகளில் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட சேர்க்கை இடங்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கே நீதிமன்றப் படியேற வேண்டியிருக்கிறது என்பதைக் கண்முன் சாட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்புத் தகுதியைப் பெறுவதன் காரணமாக இதே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதேசமயம், அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த படி நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகளையும் நாம் தவறவிடக் கூடாது.

உயர் சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதன் மூலமாக மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி நல்கைகள் நிறையக் கிடைக்கும். அதைக் கொண்டு மேலும் தரமான கல்வியை நம் குழந்தைகளுக்கு அளிக்க முடியும். இதற்கான வழி மாநில நிறுவனங்கள் அவற்றின் பழைய கட்டமைப்பையும், மாநில அரசுகளின் அதிகார வரையறையையும் இழந்துவிடாமலேயே ஒன்றிய அரசின் நிதியைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதுதான். இதற்கான பேச்சுகள் அரசியல் தளத்தில் நடக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டும் அல்ல இது; ஆகையால், இதை ஒரு தேசிய விவாதமாகவும் முன்னெடுக்கலாம். ஒன்றிய அரசு இலக்காகக் குறிப்பிடும் உயரத்தைக் கல்வித் தளத்தில் பெற எதுவெல்லாம் அவசியம் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதே இதற்குத் தீர்வாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x