

நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடி மைய இடதுசாரி சார்புள்ள ‘லேபர் கட்சி’ வென்றிருக்கிறது. இதன் மூலம் ஜெஸிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறை அந்நாட்டின் பிரதமராக ஆகியிருக்கிறார். 2017-ல் ஜெஸிந்தா பிரதமராக ஆகும்போது அவர்தான் உலகின் மிக இளைய பெண் பிரதமர். உலக அளவில் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஜெஸிந்தா. 120 இடங்கள் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், அவரது கட்சி 64 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வாக்கு வீதம் 49.1%. இதுதான் கடந்த 50 ஆண்டுகளில் அந்தக் கட்சி பெற்ற பெரிய வெற்றியாகும். 1996-ல் அந்த நாடு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை ஏற்றதிலிருந்து எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்காத மிகப் பெரிய வெற்றி இதுவாகும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி 5%-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் எந்தக் கட்சிக்கும் அவையில் இடங்கள் ஒதுக்கப்படும். மைய வலதுசாரி சார்பைக் கொண்ட எதிர்க்கட்சியான ‘தேசியக் கட்சி’ 26.8% வாக்குகளைப் பெற்றதால், அதற்கு 35 இடங்கள் கிடைத்திருக்கிறது. ஜெஸிந்தா தனது முதல் ஆட்சிக் காலத்தில் கடும் சவால்களை எதிர்கொண்டார். கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாதத் தாக்குதல், ஒயிட் ஐலேண்டு எரிமலை வெடிப்பு என்று ஆரம்பித்து, உச்சகட்டமாக கரோனா பெருந்தொற்று வந்தது. இந்தத் தேர்தலை ‘கோவிட் தேர்தல்’ என்று அழைத்ததன் மூலம் பெருந்தொற்றைத் தான் எப்படிக் கையாண்டேன் என்பதை அறிந்துகொள்வதற்கு ஜெஸிந்தா நடத்திய கருத்துக் கணிப்பைப் போன்றே ஆனது தேர்தல். 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் வெறும் 25 பேர்தான் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தார்கள். இது உலகிலேயே மிகக் குறைவான இறப்பு விகிதங்களுள் ஒன்றாகும்.
ஜெஸிந்தாவின் வெற்றியை எது கவனிக்க வைக்கிறதென்றால் அவருடைய தனித்துவமான அரசியல் பாணிதான்; அவர் சமூகரீதியில் தாராளர், பொருளாதாரரீதியில் பார்த்தால் எல்லோரையும் அரவணைத்துச்செல்பவர், அரசியல்ரீதியில் ஜனநாயகர். புதுவிதமான ஆட்சி நிர்வாகத்தை வழங்கியதன் மூலம் பரிவுள்ள ஒரு சக குடிநபராகத் தன்னை முன்வைத்துக்கொண்டார். மார்ச் 2019-ல் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் தீவிர வலதுசாரிப் பயங்கரவாதிகள் குண்டுவைத்ததில் 51 பேர் கொல்லப்பட்டபோது, ஜெஸிந்தா வெளிப்படுத்திய பக்குவத்தை உலகமே போற்றியது. அவர் உடனடியாகத் தன் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். தற்போது கிடைத்திருக்கும் வெற்றியானது மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகிறது. பொது முடக்கத்தால் நியூசிலாந்தின் பொருளாதாரம் கடுமையான சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டம் ஜெஸிந்தாவிடம் இல்லை என்பது இந்தத் தேர்தலின்போது அவர் எதிர்கொண்ட விமர்சனங்களுள் ஒன்று. இந்தியாவையும் உலகத்தையும் போன்றே கரோனா பெருந்தொற்றின் அபாயம் இன்னும் நியூசிலாந்தைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தனது விமர்சகர்களின் கணிப்பை ஜெஸிந்தா பொய்யாக்க வேண்டும்; எல்லா நியூசிலாந்தியர்களுக்காகவும் என்று அவர் கூறுவதை ஆதரிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.