

தெலங்கானாவையும் அதன் தலைநகர் ஹைதராபாத் நகரத்தையும் சூறையாடியிருக்கும் மழை வெள்ளம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் கவனத்தைக் கோருகிறது. அக்டோபர் மாதத்தில் வழக்கமாக ஹைதராபாதில் பெய்யும் மழையின் சராசரி 103.6 மி.மீ. ஆகும். ஆனால், அக்டோபர் 13 அன்று ஒரே நாளில் 192 மி.மீ. மழை பெய்தது. இந்திய வானிலை மையத்தின் தரவுகள்படி ஹைதராபாதில் கடந்த 118 ஆண்டுகளில் பெய்த மழை அளவில் இதுவே அதிகம். குறைந்த நேரத்தில் இதுபோல் அதிக அளவிலான மழை பெய்வது மக்கள் அடர்த்தி மிகுந்த எந்த நகரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; இதில் ஹைதராபாதும் விதிவிலக்கல்ல. இந்தப் பெருமழையால் 70 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இடைவிடாமல் பெய்த மழை காரணமாகவும், அந்நகரின் ஏரிகள் பல நிரம்பி வழிவதாலும் பல்வேறு இடங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன, சாலைகள் சேதமடைந்திருக்கின்றன, பாசனத்துக்கான குளங்களின் கரைகள் உடைந்திருக்கின்றன.
இது மழை தொடர்பான பேரிடர் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது கடினம்தான். பெருமழை, வெள்ளம் மட்டுமல்ல எந்த இயற்கைப் பேரிடரிலும் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். பேரிடர் மேலாண்மை முகமைகள் இந்தப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்பைத் தடுக்கவும் தண்ணீரால் சூழப்பட்ட இடங்களில் அகப்பட்டிருந்த மக்களை மீட்கவும் தம்மாலான முயற்சியை மேற்கொண்டிருக்கின்றன. எனினும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பேரிடர் தணிப்புக்கான தயார்நிலையில் அரசு இல்லாததை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கின்றன; நாட்டின் பெரும்பாலான நகரங்களைப் பீடித்துள்ள சாபக்கேடு இது.
நிரம்பி வழியும் ஏரிகளால்தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, நகரின் மையத்தில் உள்ள ஹுஸைன் சாகர் ஏரியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டுவதும் வடிகால்களை ஆக்கிரமிப்பதும் ஹைதராபாதில் மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவெடுத்திருக்கும் பெரிய பிரச்சினையாகும். இதனால், வெள்ளம் ஏற்பட்டு நகரங்கள் தண்ணீரில் மூழ்குகின்றன. சென்னையைப் போலவே ஹைதராபாதிலும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருக்கின்றன. ஹைதராபாதின் கழிவுநீர் வடிகால் அமைப்பு மிகவும் பழையது, அதை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். ஏரிகள், வாய்க்கால்கள் தவிர சதுப்புநிலங்களும் அதீத மழைப்பொழிவை உள்வாங்கிக்கொள்வதில் பெரும் பங்காற்றுகின்றன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், அதீதமான நகரமயமாதல் காரணமாக ஹைதராபாத், சென்னை போன்ற பெருநகரங்களின் சதுப்புநிலங்களில் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது.
இனி வரும் காலத்தில் நகரியத்தைத் திட்டமிடுபவர்கள் நகரங்களின் நீரியல், புவியியல் அமைப்புகளைக் கணக்கில் கொண்டால்தான் இயற்கைப் பேரிடரால் நேரிடும் சேதங்களைக் குறைக்க முடியும். வேகமாக நகரமயமாகிக்கொண்டிருக்கும் இந்தியா, தன்னுடைய நகரியம்சார் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்திடுவது அதற்கு முக்கியம்.