Published : 19 Oct 2020 07:25 am

Updated : 19 Oct 2020 07:25 am

 

Published : 19 Oct 2020 07:25 AM
Last Updated : 19 Oct 2020 07:25 AM

சமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்!

wfb

ஐநாவின் ‘உலக உணவுத் திட்டம்’ (டபிள்யு.எஃப்.பி.) அமைப்புக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருப்பது பல வகைகளில் வரவேற்க வேண்டிய ஒன்றாகிறது. நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை அதிகரிக்கவும் ராணுவச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அமைதிக்கான அமைப்புகளை முன்னெடுக்கவும் பணிபுரிந்த மனிதர்களையும் அமைப்புகளையும் நோபல் அங்கீகரித்துவருவதன் தொடர்ச்சிதான் இது என்றாலும், பட்டினி ஒழிப்புக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரமானது, மனிதகுலம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வழிவகுக்கும்.

யேமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்க்கினா ஃபஸோ போன்ற நாடுகளில் பட்டினியால் விளையவிருந்த பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தியதில், ‘உலக உணவுத் திட்டம்’ பெரும் பங்காற்றியிருப்பதைப் பெருந்தொற்று ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த ஆண்டில், நோபல் பரிசுக் குழு சரியாகவே இனம்கண்டு அங்கீகரித்திருக்கிறது. போர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, உணவு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானங்கள், லாரிகள் என்று பல்வேறு வாகனங்களில் உயிருக்கு ஆபத்தான தருணங்களையும் பொருட்படுத்தாமல், உணவு கொண்டுபோய்ச் சேர்த்த நிவாரணப் பணியாளர்களுக்கு முறையான அங்கீகாரமாக இந்த நோபல் பரிசைக் கருதலாம். ‘சமாதானத்தை வெறும் வயிற்றுடன் நாம் வென்றெடுக்க முடியாது’ என்பது 1949-ல் சமாதானத்துக்காக நோபல் பரிசு வென்ற லார்டு ஜான் பாய்டு ஓரின் கூற்று. அதைப் பிரதிபலிக்கும் விதமாகவே தற்போதைய விருது அமைந்திருக்கிறது.


இந்த அறிவுரை உலக நாடுகள் அனைத்தின் செவியிலும் விழ வேண்டும். ஏனெனில், உலகின் பட்டினியைப் போக்குவதற்கான ‘உலக உணவுத் திட்ட’த்தின் பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் ஊட்டச்சத்துக் குறைவு எனும் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர்; உள்நாட்டுப் போர்களால் பீடிக்கப்பட்டிருக்கும் சிரியாவில் மட்டும் கிட்டத்தட்ட 46 லட்சம் மக்கள் உணவு உதவியை நம்பியே வாழ்கிறார்கள்.

பட்டினி ஒழிப்பு என்பது மனிதகுலம் அடைய முடியாத இலக்கு அல்ல. 2030-க்குள் பட்டினியை முற்றிலும் ஒழிப்பது என்கிற இலக்கையும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த இலக்கை அடைய போர்களுக்கும் வன்முறைகளுக்கும் உலகம் முற்றுப்புள்ளி வைப்பது முக்கியம். செல்வம் கொண்ட சமூகங்கள், வறிய சமூகங்கள் இடையேயான இணைப்புப் பாலம் முக்கியம். நோபல் பரிசுக் குழு ஓரிடத்தில் சுட்டிக்காட்டியபடி, சர்வதேச நாடுகளின் ஒற்றுமையும் பலதரப்புக் கூட்டுறவும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது. சரிசமமான உணவுப் பகிர்மானம் நடைபெற்று, அதன் மூலம் பட்டினியை ஒழிப்பதற்கு ஏதுவாக உலகம் முழுவதுமே ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். தன் வயிறு, தன் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை ஒட்டுமொத்த உலகமும் அழித்திட வேண்டும்.


உலக உணவுத் திட்டம்WFBசமாதான நோபல்பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x