Published : 29 May 2014 07:00 AM
Last Updated : 29 May 2014 07:00 AM

சீமாந்திரா என்ன பகை நாடா?

ஆந்திரத்தை சீமாந்திரா, தெலங்கானா என்ற இருமாநிலங்களாகப் பிரித்தாகிவிட்டது அவ்விரு சட்டப் பேரவைகளுக்குமான தேர்தலும் முடிந்துவிட்டது. சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசும் அமையப்போவது நிச்சயமாகிவிட்டது. சந்திரசேகர ராவ் ஜூன் 2-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

இந்நிலையில், ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களை, புதிய தெலங்கானா அலுவலகங்களில் பணிபுரிய அனுமதிக்க மாட்டேன் என்று முழங்கியிருக்கிறார் சந்திரசேகர ராவ். அவர்கள் யார், எத்தனை பேர் என்று கண்டுபிடித்துப் பட்டியல் தருமாறு தெலங்கானா பகுதி அரசு ஊழியர்கள் சங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத் திருக்கிறார். அந்த சங்கம் 193 பேரை அடையாளம் கண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் சுமார் 12 பேர்தான் அப்படி இருக்கின்றனர் என்று அதிகாரிகள் குழு சரிபார்ப்புக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங் களும் மோதல்களும் உயிரிழப்புகளும் நமக்கு எந்த நாளும் பாடமாக இருக்க வேண்டும். இந்தியாவில் பிறந்த எவரும் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்றலாம், தொழில் செய்யலாம் என்று அரசியல் சட்டமே அனுமதி தந்திருக்கும் நிலையில், நேற்றுவரை ஒரே ஆந்திர மாநிலம் என்ற குடையின் கீழ் சகோதரர்களாகப் பணியாற்றியவர்களை, வெறும் நில எல்லை அடிப்படையில் பகைவர்களாகக் கருதி வெளியேற்ற நினைக்கும் சந்திரசேகர ராவின் முயற்சி வேதனையளிக்கிறது.

அரசு ஊழியர்களை மட்டுமல்ல, நிதி ஆதாரங்களை, நீர்வளங் களை, கனிமங்களை, மின்சாரத்தை என்று பலவற்றை இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும் நிலையில், இப்படிப் பகையை வளர்ப்பது எதற்காக? எது சீமாந்திரா, எது தெலங்கானா என்று திட்ட வட்டமாக வரையறை செய்யப்பட்டாலும் அங்கே பிறந்தவர்கள் இங்கே தொழில், வர்த்தகம் செய்வதும் அரசு வேலை பார்ப்பதும், இங்கே பிறந்தவர்கள் அங்கே அவற்றைச் செய்வதும் இயற்கைதானே? இது ஒன்றும் போருக்குப் பிறகு ஏற்படும் பிரிவினையல்ல. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலைமையைப் போக்கத்தான் இந்தப் பிரிவினை. ஒரே தாய்மொழியைக் கொண்ட இரு வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிரியும்போது இப்படியா நடந்துகொள்வது? உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கியவை. கல்வியறிவில் ஆந்திரத்தைவிடக் குறைவு. அப்படியிருந்தும் அந்த மாநிலங்களைப் பிரித்துப் புதிய மாநிலங்களை ஏற்படுத்தியபோது இப்படியெல்லாம் நடக்கவில்லை. அதற்குக் காரணம், எந்த மாநிலமாக இருந்தாலும் நாம் இருக்கப்போவது ஒரே நாட்டில் என்ற புரிதல்தான்.

சந்திரசேகர ராவ் இவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எல்லா வளங்களையும் இருபகுதி மக்களின் தேவைகளுக்கும் ஏற்பப் பிரித்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போன்ற ஒரு துயரத்துக்கு வித்திட்டுவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x