Published : 15 Oct 2020 07:31 am

Updated : 15 Oct 2020 07:31 am

 

Published : 15 Oct 2020 07:31 AM
Last Updated : 15 Oct 2020 07:31 AM

அமெரிக்க வலையில் வீழ்ந்திடக் கூடாது இந்தியா!

america-india

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு தரப்புகளுக்கிடையிலான (குவாட்) வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டோக்கியோவில் நடைபெற்றதன் மூலம் ‘குவாட்’ அமைப்பு தீர்க்கமான ஓர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறது. சமீபத்தில் ஐநா பொது அவையில் சந்தித்துக்கொண்ட இந்த அமைச்சர்கள், கரோனா பெருந்தொற்றுக்கு இடையேயும் குவாட் சந்திப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதால் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. வழக்கமாக, குவாட் மாநாடுகளின் தீர்மானங்கள் ரகசியமாக இருக்கும். இந்த முறை அப்படி அல்ல. இந்த மாநாட்டை நடத்திய நாட்டின் பிரதமர் என்ற முறையில் யோஷிஹிதே சுகா, குவாட் அமைப்பை 2007-ல் முன்னெடுத்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அளவுக்குச் செயலூக்கம் கொண்டவராக இருக்க மாட்டாரோ என்ற சந்தேகத்தைப் போக்கினார். இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நிலவிய பதற்றத்தின் மீது இந்திய அரசின் கவனம் குவிந்திருந்தபோதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் சென்று திரும்பியிருக்கிறார். தேர்தல் நடப்பதற்கு இன்னும் கொஞ்ச காலமே இருப்பதால், இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியிருக்கக் கூடும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்பியோ கலந்துகொண்டார். சீனாவின் அத்துமீறலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான நகர்வுகளை நோக்கி குவாடைச் செலுத்துவதே தன் திட்டம் என்றும், இந்த நான்கு-தரப்பு உறவானது சம்பிரதாயமான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.

‘நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்’டில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, தெற்கு, கிழக்குச் சீனக் கடற்பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் போன்றவற்றைக் குறிப்பிட்டு ‘சீனாவின் சுரண்டல், ஊழல், அச்சுறுத்தல்’ ஆகியவற்றை எதிர்த்து இந்தப் பிரதேசத்தைக் காப்பதற்கு குவாட் ஒன்றுசேர்ந்து இயங்க வேண்டும் என்று பாம்ப்பியோ அறைகூவல் விடுத்திருக்கிறார். சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் உறவுக்காக ஜனநாயக நாடுகள் ஒன்றுசேர வேண்டும் என்பது மட்டுமல்ல அவர் உணர்த்துவது. சீனாவால் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாடுகளின் ராணுவக் கூட்டுறவாக குவாடை மாற்றுவதில் அமெரிக்கா விருப்பம் கொண்டிருப்பது தெரிகிறது.

இப்படி வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட உள்நோக்கங்களின் முக்கியத்துவத்தை இந்தியா குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களுக்கு ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் கட்டுப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்தியா இதுவரை தனது ராணுவரீதியிலான பாதையை சுதந்திரமாகவே வகுத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பாம்ப்பியோவின் வார்த்தைகள் வெற்றுக் கூச்சல்களாகக்கூட இருக்கலாம். எனினும், இந்தோ-பசிஃபிக் விவகாரத்துக்குள் இந்தியாவைக் கொண்டுவரும் ஆர்வத்தையும் அதே நேரத்தில் இந்திய-சீன நெருக்கடிக்குள் குவாடையும் பங்கெடுக்கச் செய்யும் ஆர்வத்தையும் அவரது பேச்சு உணர்த்துகிறது. இந்திய அரசு இதுபோன்ற யோசனைகளைப் புறம்தள்ளிவிட்டிருக்கிறது. இந்த நிலைப்பாட்டிலிருந்து தற்போது எப்படி மாறினாலும் அது நன்மை தருவதாக இருக்காது. குவாடை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், அமெரிக்க ஆதிக்கத்திடம் சிக்கிவிடக் கூடாது என்பதும் முக்கியமானது.

AmericaIndiaஅமெரிக்க வலையில் வீழ்ந்திடக் கூடாது இந்தியாஆஸ்திரேலியாஇந்தியாஜப்பான்அமெரிக்காகுவாட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x